Home One Line P2 ஆண்டிராய்டு கோ 10 – கூகுள் அறிவித்தது

ஆண்டிராய்டு கோ 10 – கூகுள் அறிவித்தது

903
0
SHARE
Ad

சில நாட்களுக்குமுன், கூகிள் அதிகாரப்பூர்வமாக ஆண்டிராய்டு 10ஐ அடிப்படையாகக் கொண்ட ஆண்டிராய்டு ‘கோ’ (Android Go) வின் பதிப்பை வெளியிட்டது. இது நுழைவு நிலை திறன்பேசிகளுக்காக (entry level smart phones) வடிவமைக்கப்பட்ட இயங்கு தளத்தின் புதிய மேம்பாடாகும்.  இந்தப் பதிப்பு முன்பை விட அளவில் சிறியது என்றும் செயல்பாட்டில் வேகமானது என்றும் கூறிய கூகிள், இதுவரை வந்த ஆண்டிராய்டு கோ பதிப்புகளில் இதுவே சிறந்தது என்றும் கூறியுள்ளது.

இந்தப் பதிப்பு, ஆண்டிராய்டு (கோ பதிப்பு) என்றும் அழைக்கப்படுகிறது. இது நுழைவு நிலை திறன்பேசிகளில் இயங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட ஆண்டிராய்டின் சுருக்கப்பட்டப் பதிப்பாகும். ஆண்டிராய்டு கோவில் உள்ள மாற்றங்கள் மூன்று முக்கியப் பகுதிகளை உள்ளடக்கியுள்ளன. இயக்க முறைமை, கூகிள் பிளே மற்றும் கூகிள் செயலிகள் ஆகியவையே இந்தப் பகுதிகள்.  இவை, குறைந்த வன்பொருளில் சிறந்த பயன்பாட்டு அனுபவத்தை வழங்குவதற்காக மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளன.

பல நுழைவுநிலைத் திறன்பேசிகள் பொதுவாக நம்பமுடியாத அளவிற்கு மலிவானவை. ஆண்டிராய்டு கோ சரியாக இயங்குவதற்கு உயர்நிலை வன்பொருள் தேவையில்லை என்பதால் இவற்றில் உள்ள சேமிப்பில் இருந்து செயல்பாட்டுத் திறன் வரை அளவும் ஆற்றலும் குறைக்கப்பட்டுள்ளன.

#TamilSchoolmychoice

மேலும், ஆண்டிராய்டு கோ-வுக்காக கூகுள் வடிவமைக்கும் செயலிகள் அவற்றின் இயல்பான முழுப் பயன்பாட்டுப் பதிப்புகளைவிட மிகச் சிறியதாகவும் மெலிந்ததாகவும் இருக்கும். கூகிளின் புள்ளிவிவரங்களின் படி இந்தச் சிறிதாக்கப்பட்டச் செயலிகள், ஆண்டிராய்டின் முழுப்பயன்பாட்டுடன் இயங்கும்  உயர்நிலை திறன்பேசிகளைக் கொண்ட பயனர்களையும் கவர்ந்திழுக்கிறது!

புதிய ஆண்டிராய்டு கோ – புதியது என்ன?

பலர் எதிர்பார்ப்பது போல, ஆண்டிராய்டு 10 ஐ அடிப்படையாகக் கொண்ட ஆண்டிராய்டு ‘கோ’வின் மிகப்பெரிய முன்னேற்றம் : அதிகரிக்கப்பட்ட வேகம், குறைக்கப்பட்ட அளவு.

அளவு

கூகிளின் கூற்றுப்படி, இந்தப் புதிய பதிப்பு, இதுவரை வெளிவந்த ஆண்டிராய்டு கோ பதிப்புகளில் ஆக மெலிந்த பதிப்பாகும். எடுத்துக்காட்டாக, ஆண்டிராய்டு 7இன் கோ பதிப்பைவிட இந்த 10இன் பதிப்பு பாதி இடத்தை மட்டுமே எடுத்துக் கொள்கிறது.

ஆண்டிராய்டு கோ இயங்கும் பல நுழைவுநிலைத் திறன்பேசிகளின் சேமிப்பளவு 8 ஜிபி மட்டுமே உள்ளது. எனவே ஆண்டிராய்டு இயங்குதளம், குறைந்த இடத்தை மட்டுமே எடுத்துக்கொள்வது மிகவும் முக்கியமானது.

வேகம்

புதிய ஆண்டிராய்டு கோ’வில் இயங்கும் செயலிகள் வேகமாக செயல்படுவதற்காக கூகிள் பல முன்னேற்றங்களைச் செய்துள்ளது. ஆண்டிராய்டு 9ஐ அடிப்படையாகக் கொண்ட கோ பதிப்பைவிட, இந்தப் பதிப்பு செயலிகள் தொடங்கும் வேகத்தை 10 விழுக்காடுக் கூட்டியுள்ளதாக கூகிள் கூறுகிறது.

செயலிகள்

இறுதியாக, புதிய ஆண்டிராய்டு கோவில் இயங்கும் கூகிளின் செயலிகள் எடுத்துக் கொள்ளும் இடங்கள் வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளன. இதில் யூடியூப் கோ, கூகிள் லென்ஸ், கூகிள் புகைப்படங்களை அடிப்படையாகக் கொண்ட கேலரி கோ, இவற்றோடு பரவலாகப் பயன்படுத்தப்படும் கூகிளின் மற்றச் செயலிகள் அனைத்தும், ஆண்டிராய்டு கோவின் முந்தைய பதிப்புகளை விட இப்போது 50 விழுக்காடு சிறியதாக இருப்பதாக கூகிள் கூறுகிறது.

ஆண்டிராய்டு கோ அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, இந்த இயங்குதளத்துடன் 1,600 க்கும் மேற்பட்ட வெவ்வேறு நுழைவு-நிலை திறன்பேசிகள் வெளியிடப்பட்டுள்ளன. சில மலிவான பேசிகளின் 27 அமெரிக்க டாலருக்கு மட்டுமே (2000 இந்திய ரூபாய், 115 மலேசிய ரிங்கிட்) வெளியிடப்பட்டுள்ளன.  இதுபோன்ற பேசிகளையே ஆண்டிராய்டு கோ தொடர்ந்து ஆதரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆண்டிராய்டு கோ – வில் செல்லினம்

ஆண்டிராய்டு கோ-பதிப்பு வெளிவந்தது முதல் இந்த இயங்குதளங்கள் இயங்கும் நுழைவுநிலைத் திறன்பேசிகளில், செல்லினம் எந்தச் சிக்கலும் இன்றி இயங்கி வந்துள்ளது. தமிழ் பேசும் அனைவரும் எளிமையாகவும் விரைவாகவும் தமிழில் எழுத  உதவுவதே செல்லினத்தின் தலையாய நோக்கம். எனவே நுழைவுநிலையாக இருந்தாலும் உயர்நிலையாக இருந்தாலும், இந்தத் திறன்பேசிகளில் தமிழ்த் துலங்க செல்லினம் தொடர்ந்து முயன்றுகொண்டே இருக்கும்!

-செல்லினம்