Home One Line P1 மலேசியத் தமிழ் இலக்கிய உலகின் தவிர்க்க முடியாத ஆளுமை “அக்கினி” சுகுமார்

மலேசியத் தமிழ் இலக்கிய உலகின் தவிர்க்க முடியாத ஆளுமை “அக்கினி” சுகுமார்

1224
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மலேசியாவின் குறிப்பிடத்தக்க பத்திரிக்கையாளரும், எழுத்தாளரும், கவிஞருமான ‘அக்கினி’ என இலக்கிய உலகில் அறியப்பட்ட சுகுமார் இன்று அகால மரணமடைந்தார் என்ற அதிர்ச்சிச் செய்தி அவரை அறிந்த பலரையும் இன்று உலுக்கிவிட்டது.

இளமைக் காலம் முதல் குறுந்தாடி, தழையத் தழைய கழுத்துக்கு கீழ் வரை இறங்கும் செழுமையான தலைமுடி என என்றும் இளமையும் வலம் வந்த அக்கினி தீடீரென மரணமடைந்தது நம்ப முடியாத செய்தியாகத்தான் இருக்கிறது.

தமிழ் மலர், வானம்பாடி, தமிழ் ஓசை, மலேசிய நண்பன், மக்கள் ஓசை என பல்வேறு பத்திரிக்கைகளில் நீண்ட நாளாகத் தடம் பதித்த அக்கினி அண்மைய ஆண்டுகளில் ‘வணக்கம் மலேசியா’ இணைய ஊடகத்தில் பணியாற்றி வந்தார்.

#TamilSchoolmychoice

வானம்பாடி வாரப் பத்திரிக்கை காலங்களில் ‘அக்கினி’ என்ற பெயரில் அவர் எழுதிய புதுக் கவிதைகள், ஏராளமான வாசகர்களைக் கவர்ந்தன. மலேசியாவின் நவீன புதுக் கவிதை உலகை செதுக்கியதில், செப்பனிட்டதில் தவிர்க்க இயலாத ஓரிடம் எப்போதும் அக்கினிக்கு உண்டு.

வானம்பாடி காலத்திலும், பின்னர் நாளிதழ்களிலும் பணியாற்றியபோது, அறிவியல் பூர்வமான கட்டுரைகளையும், சுவாரசியமான சம்பவங்களைக் கொண்ட தொகுப்புகளையும் அடிக்கடி ஆர்வமுடன் எழுதி வந்தார்.

பழகுவதில் சிறந்த பண்பாளராக விளங்கி, பலருக்கும் இனிய நண்பராகவும் விளங்கினார்.

கவிதைகள் எழுதுவதை காலப் போக்கில் குறைத்துக் கொண்டாலும், இறுதிவரை எழுத்துப் பணியிலும், பத்திரிக்கைத் துறையிலும் ஆர்வத்தோடு ஈடுபட்டு வந்தவர் அக்கினி.

அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் செல்லியல் குழுமத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபத்தையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

-இரா.முத்தரசன்