ஜோர்ஜ் டவுன் – கடந்த திங்கட்கிழமை (9 ஜனவரி) நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் பத்திரிக்கைக்கு எதிராகத் தான் தொடுத்திருந்த அவதூறு வழக்கு விசாரணைக்காக இங்குள்ள பினாங்கு உயர் நீதிமன்றம் வந்த டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.
வழக்கமாக தனது வழக்குகளுக்காக கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் வரும் அன்வார் இப்ராகிம் இந்த முறை தனது சொந்த மாநிலமான பினாங்கு மாநிலம் வந்ததால், பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டன. நீதிமன்ற அறைக்குள் இருக்கும்போது சுமார் 15 சிறைக் காவலர்களும், காவல் துறை அதிகாரிகளும் அவரைச் சுற்றி வளைத்திருந்தனர்.
அன்வாரைக் காண நீதிமன்றம் வந்த லிம் குவான் எங்….
நீதிமன்றத்தில் இருந்த தனது ஆதரவாளர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களுடன் பேச அன்வார் அனுமதிக்கப்பட்டாலும், அவரது சிறை வாழ்க்கை பற்றி பத்திரிக்கையாளர்கள் கேள்வி கேட்க முற்பட்டபோது அன்வாரின் அவதூறு வழக்கு குறித்து மட்டுமே பேசப்பட வேண்டும் என்றும் மற்ற விவகாரங்கள் குறித்து பேசக் கூடாது என்றும் காவல் துறையினர் கட்டுப்பாடுகள் விதித்தனர்.
“நீங்கள் அவ்வாறு கேட்கக்கூடாது என தடைசெய்யும் சட்டங்கள் எதுவும் இல்லை. இது ஜனநாயகம். நீங்கள் தாராளமாகக் கேட்கலாம். நான் பேசக் கூடாது என்று தடைசெய்யும் சட்டங்கள் எதுவும் இல்லை. கேட்க வேண்டியது உங்கள் கடமை. இந்த நீதிமன்றத்துக்குள் நீதிபதிக்கு மட்டுமே உத்தரவுகள் வழங்கும் அதிகாரம் உண்டு” என்று அன்வார் குறுக்கிட்டு பத்திரிக்கையாளர்களை நோக்கிக் கூறினார்.
அன்வாருக்கு ஆதரவாகத் திரண்ட ஆதரவாளர்கள்…
இதனைத் தொடர்ந்து சிறைக் காவலாளிகள் அன்வாரைச் சூழ்ந்து கொண்டு நீதிமன்றப் பார்வையாளர்கள் அவரைப் பார்க்க முடியாத வண்ணம் அவரை மறைத்துக் கொள்ளப் பார்த்தனர்.
இருப்பினும் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை நோக்கிப் பேசிய அன்வார் சிறையில் தனக்கு தற்போது மேலும் கடுமையான நடைமுறைகள் அமுல்படுத்தப்படுவதாகவும், சிறையில் வழங்கப்படும் உணவு காரணமாக தனது எடை மேலும் குறைந்துள்ளதாகவும் கூறினார்.
நீதிமன்றக் கட்டிடத்திற்கு வெளியே திரண்டிருந்த அன்வார் இப்ராகிம் ஆதரவாளர்கள்…
மேலும் சிறை அதிகாரிகளால் தான் தொந்தரவு செய்யப்படுவதாகவும் கூறிய அன்வார் தொடர்ந்து தன்பக்கம் நிற்கும் ஆதரவாளர்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
அன்வாரின் பினாங்கு நீதிமன்ற வருகையை முன்னிட்டு திங்கட்கிழமை காலை முதலே நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் நீதிமன்றத்தில் குழுமத் தொடங்கியிருந்தனர்.
அன்வாரை நீதிமன்றத்தில் காண பினாங்கு முதல்வர் லிம் குவான் எங்கும் வருகை தந்திருந்தார்.
வழக்கு முடிந்து காரில் கொண்டு செல்லப்படும் முன் மக்கள் வெள்ளத்தில் அன்வார்….
நீதிமன்ற வழக்கு முடிவடைந்து நியூ ஸ்ட்ரெயிட்ஸ் பத்திரிக்கையுடன் சமாதான உடன்பாடு காணப்பட்டதும், அன்வார் பலத்த காவல்துறை பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டார்.
பின்னர் 10 கார்கள் கொண்ட அணிவகுப்போடு அன்வார் நீதிமன்ற வளாகத்தில் இருந்து, பினாங்கு ஜாவி சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். திங்கட்கிழமை இரவு ஜாவி சிறைச்சாலையில் வைக்கப்பட்ட அவர் செவ்வாய்க்கிழமை காலை அங்கிருந்து புறப்பட்டு, தான் சிறைவாசம் அனுபவித்து வரும் சுங்கை பூலோ சிறைச்சாலைக்கு கொண்டு வரப்பட்டார்.