Home Featured இந்தியா வெடிகுண்டு மிரட்டல்: மும்பையில் 3 மலேசிய விமானங்கள் மீது கடுமையாகப் பரிசோதனை!

வெடிகுண்டு மிரட்டல்: மும்பையில் 3 மலேசிய விமானங்கள் மீது கடுமையாகப் பரிசோதனை!

790
0
SHARE
Ad

mumbai-airportமும்பை – திங்கட்கிழமை (9 ஜனவரி) இரவு மும்பை விமான நிலையத்திலிருந்து கோலாலம்பூர் வரவிருந்த மலேசிய விமானம் ஒன்றில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக தொலைபேசி மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, மும்பை விமான நிலையம் முழுவதும் கடுமையான பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

அனைத்துலக காவல் துறையின் (இண்டர்போல்) மூலம் விடுக்கப்பட்ட எச்சரிக்கையைத் தொடர்ந்து மும்பையின் சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் புறப்படத் தயாராக இருந்த இரண்டு மாஸ் விமானங்களும் ஒரு ஏர் மலிண்டோ விமானமும் திங்கட்கிழமை இரவு கடுமையாகப் பரிசோதனை செய்யப்பட்டன.

வெடிகுண்டு மிரட்டல் இருப்பதாக அறிவிக்கப்பட்டு, விமானத்தில் ஏற்றப்பட்ட பயணிகள் அனைவரும் மீண்டும் இறக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டனர்.

#TamilSchoolmychoice

தொடர்ந்து சுமார் 400 பயணிகளின் 500-க்கும் மேற்பட்ட பயணப் பைகளும் தீவிரமாகப் பரிசோதிக்கப்பட்டன. இருப்பினும் சந்தேகத்திற்குரிய பொருட்கள் எதுவும் அகப்படவில்லை.

இந்தப் பரிசோதனைகள் காரணமாக, கோலாலம்பூர் புறப்படவிருந்த விமானங்கள் தாமதப்படுத்தப்பட்டு நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை வரையில் மும்பை விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டிருந்தன. பின்னர் அந்த மூன்று விமானங்களும் பத்திரமாக நேற்று செவ்வாய்க்கிழமை கோலாலம்பூர் வந்தடைந்தன.

எனினும், மும்பை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன.

வெடிகுண்டுகளை அகற்றும் காவல் துறைப் பிரிவினரும், வெடிகுண்டுகளை மோப்பம் பிடித்து அடையாளம் காட்டும் மோப்ப நாய்கள் பிரிவினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.