Home Featured நாடு மஇகா வழக்கு : விசாரணைகள், மேல்முறையீடுகள் என – முடிவதற்கு 2 ஆண்டுகள் ஆகலாம்!

மஇகா வழக்கு : விசாரணைகள், மேல்முறையீடுகள் என – முடிவதற்கு 2 ஆண்டுகள் ஆகலாம்!

817
0
SHARE
Ad

subra-and-palani

கோலாலம்பூர் – நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மஇகா-சங்கப் பதிவகம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு, மஇகா நடவடிக்கைகளையோ, தலைமைத்துவத்தையோ எந்தவிதத்திலும் பாதித்ததாகத் தெரியவில்லை.

சில ஊடகங்கள் இந்த வழக்கினால் மஇகாவில் பெரும் அதிரடி மாற்றங்கள் ஏற்படும் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியிருந்தாலும், சட்ட ரீதியாக அணுகிப் பார்க்கும்போது இந்த வழக்கின் மேல் முறையீடுகள், முழு விசாரணைகள் என அனைத்தும் நடந்து முடிந்து, இறுதித் தீர்ப்பு வெளியாவதற்கு மேலும் இரண்டு ஆண்டுகள் பிடிக்கலாம் என இந்த வழக்கைக் கண்காணித்து வரும் வழக்கறிஞர்கள் கருதுகின்றனர்.

#TamilSchoolmychoice

கூட்டரசு நீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்யப்படுமா?

Court of Appeal 440 x 215

முதல் கட்டமாக மேல் முறையீட்டு நீதிமன்ற (Court of Appeal)  தீர்ப்புக்கு எதிராக  மஇகாவும், சங்கப் பதிவகமும் கூட்டரசு மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு (Federal Court) முறையீடு செய்யலாம். இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை.

ஆனால், மலேசிய சட்டங்களின்படி, எந்த ஒரு வழக்கையும் கூட்டரசு மேல் முறையீட்டு நீதிமன்றத்திற்குக் கொண்டு போவதற்கு முன்னால், மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும். சம்பந்தப்பட்ட வழக்கு கூட்டரசு மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் விசாரிக்கப்படுவதற்கு ஏற்புடைய, சட்ட சிக்கலான ஒரு வழக்குதானா என்பதை மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் விசாரித்து முடிவெடுப்பார்கள்.

மஇகா-சங்கப் பதிவகம் சார்பில் கூட்டரசு நீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்யப்பட்டால் முதலில் அந்த விண்ணப்பத்தை மேல்முறையீட்டு நீதிமன்றம் விசாரித்து முடிவு செய்யும். தீர்ப்பு சரியானதுதான், இதனை கூட்டரசு நீதிமன்றத்திற்கு அனுப்ப வேண்டியதில்லை என்ற முடிவை மேல்முறையீட்டு நீதிமன்றம் செய்தால், மேல்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்பிற்கு ஏற்ப, இந்த வழக்கு கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்திற்கு மீண்டும் முழு விசாரணைக்கு அனுப்பப்படும்.

ஆனால், கூட்டரசு நீதிமன்ற விசாரணைக்கு அனுப்பலாம் என மேல்முறையீட்டு நீதிமன்றம் முடிவெடுத்தால், கூட்டரசு நீதிமன்றத்தில் விசாரணைக்கு தேதி குறிப்பிடப்பட்டு, கூட்டரசு நீதிமன்றம் இறுதித் தீர்ப்பை வழங்கும்.

இந்த நடைமுறைகள் முடிவடைவதற்கு மேலும் 6 மாதங்கள் பிடிக்கலாம் என வழக்கறிஞர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

10 ஜனவரி 2017-ஆம் தேதி வழங்கப்பட்ட மேல்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக கூட்டரசு நீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்ய மஇகா-சங்கப் பதிவக வழக்கறிஞர்கள் ஆலோசித்து வருவதாக மஇகா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஆக, மஇகா-சங்கப் பதிவகம் தரப்புகளுக்கு தற்போது இரண்டு தேர்வுகள் இருக்கின்றன.

முதலாவது செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்ட மேல்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக் கொண்டு கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் முழு வழக்கு விசாரணையைச் சந்திக்கத் தயாராவது, அல்லது,

இரண்டாவதாக கூட்டரசு நீதிமன்றத்திற்கு மேல் முறையீடு செய்வது!

இந்த இரண்டு முடிவுகளில் எதை அவர்கள் எடுக்கிறார்களோ அதை வைத்து அடுத்த கட்ட சட்ட நடவடிக்கைகள் தொடரும்.

மீண்டும் உயர்நீதிமன்ற வழக்கு நடந்தால்….

Dutacourtஅப்படியே மீண்டும் கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் முழு விசாரணை தொடங்குவதற்கு ஒப்புக் கொள்ளப்பட்டாலும், அந்த விசாரணை தொடங்குவதற்கு சுமார் மூன்று மாதங்கள் ஆகலாம்.

அதன் பின்னர் வழக்கு விசாரணைகள் நடந்து முடியும்போது மேலும் ஆறு மாதங்கள் ஆகலாம். உயர்நீதிமன்ற தீர்ப்பு எத்தகையதாக இருந்தாலும், தோல்வியுற்ற தரப்பு நிச்சயம் மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு மீண்டும் மேல் முறையீடு செய்யும்.

மேல்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்பு எதுவாக இருந்தாலும், அதை எதிர்த்து கூட்டரசு நீதிமன்றத்திற்கான மேல்முறையீடும் நிச்சயம்.

MIC logoஎனவே, இந்த வழக்கின் முழு விசாரணைகள் நடந்து முடிந்து, மேல்முறையீடுகள் மீதான தீர்ப்புகள் வெளியாவதற்கு எப்படியும் குறைந்தது 2 ஆண்டுகள் பிடிக்கும் என சட்டத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மஇகா தலைமைத்துவத்தில் – நடவடிக்கைகளில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பில்லை

இதனால், இந்த வழக்கு நடந்து முடிவதற்கு முன்னால், 14-வது பொதுத்தேர்தலும் நடந்து முடிந்துவிடும்.

பொதுத்தேர்தல் நடந்து முடிந்ததும், மஇகாவுக்கான கட்சித் தேர்தல்களும் நடத்தப்படும்.

சங்கப் பதிவகம் மீதான வழக்கு, மஇகா தலைமைத்துவத்தையோ, கட்சியின் நடவடிக்கைகளையோ, கட்சியின் தேர்தல்களையோ பாதிக்காது என்பதால், வழக்கு நடந்து முடிந்து, மேல்முறையீடுகள் விசாரிக்கப்பட்டு, இறுதித் தீர்ப்புகள் வருவதற்கு முன்னால்,

14-வது பொதுத் தேர்தலும், மஇகாவின் கட்சித் தேர்தல்களும் நடந்து முடிந்துவிடும்.

இந்தக் காரணங்களால், இந்த வழக்கு குறித்து மஇகா வட்டாரங்களில் எந்தவித சலசலப்பையும், பரபரப்பையும் காண முடியவில்லை என்பதே தற்போதைய நிலவரம்!

-இரா.முத்தரசன்