Home Featured கலையுலகம் திரைவிமர்சனம்: “பைரவா” – இந்த முறை சென்னையிலிருந்து திருநெல்வேலி செல்லும் விஜய்!

திரைவிமர்சனம்: “பைரவா” – இந்த முறை சென்னையிலிருந்து திருநெல்வேலி செல்லும் விஜய்!

1033
0
SHARE
Ad

bairavaa-vijay-poster

கோலாலம்பூர் – விஜய் வெற்றிப் படங்களில் வழக்கமாகப் பின்பற்றப்படும் ஒரு திரைக்கதை அமைப்பு, ஒன்று கிராமத்திலிருந்து வந்து சென்னை வில்லன்களை ஒழித்துக் கட்டுவார் அல்லது சென்னையிலிருந்து புறப்பட்டுப் போய் மதுரை போன்ற நகர்களின் வில்லன்களை ஒழித்துக் கட்டுவார்.

இந்த முறை அவர் சென்னையிலிருந்து புறப்பட்டு செல்வது திருநெல்வேலிக்கு! அங்கு கல்வித் தந்தை என்ற பெயரில் அட்டூழியம் செய்யும் வில்லனைத் துவம்சம் செய்கின்றார்.

#TamilSchoolmychoice

இதுதான் பைரவாவின் ஒருவரிக் கதை!

திரைக்கதையின் சொதப்பல்கள்

bairavaa-poster

படத்தின் ஆரம்பமே கொஞ்சம் சொதப்பலாகத்தான் இருக்கிறது. கடன் கொடுத்தவனிடம் கடனை திரும்ப வாங்கச் செல்லும் ஒரு வங்கி நிர்வாகி 64 இலட்சம் ரூபாய் பணத்தை வில்லன் ஒரு பையில் போட்டுத் தர – அதையும்  எண்ணிப் பார்க்காமலேயே, கையெழுத்து போட்டு வாங்கிக் கொள்கிறாராம். அதன்பிறகு திறந்து பார்த்தால், உள்ளே செங்கல் இருக்கிறதாம்.

“என்னோடு ஒரு ஓவர் கிரிக்கெட் ஆடு! நீ ஜெயித்து விட்டால் பணத்தைத் தந்து விடுகிறேன்” என்று வில்லன் கூற அதற்கேற்ப கிரிக்கெட் ஆடத் தெரியாது என்று கூறிவிட்டு, பின்னர் பணம் கிடைக்குமே என்ற நப்பாசையில் கிரிக்கெட் ஆடுகிறாராம் அந்த வங்கி நிர்வாகி. அதுவும் சென்னையில்!

இப்படியா பூச்சுற்றுவது!

பின்னர் அதே வில்லனுடன் கிரிக்கெட் ஆடி விஜய் பணம் வசூல் செய்து வருகிறாராம். இரண்டாவது பூச்சுற்றல் இது!

இருப்பினும், தொடர்ந்து விஜய் வருகையால், அவரது சின்னச் சின்ன வழக்கமான சில்மிஷங்களால், படம் மெல்ல சூடுபிடிக்கத் தொடங்குகின்றது.

Bairavaa-vijay-keerthi

மலர்விழி என்ற அழகான கீர்த்தி சுரேஷ் கதைக்குள் வந்ததும் நாமும் இரசிக்கத் தொடங்குகின்றோம். விஜய்யும் அவர்மீது காதலில் விழுகின்றார்.

ஆனால் கீர்த்தி விஜய்யிடம் சொல்லத் தொடங்கும் அவர் படித்த திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி கதையும் நம்ப முடியாத ஒன்றாக இருக்கிறது. அண்மையில் ஊடகங்களில் பெரிதுபடுத்தப்பட்ட – பல்கலைக்கழகத்தில் இடம் வாங்கித் தருகிறேன் என்று பணம் வசூலித்த மதன் என்பவரின் கதையை ஒத்திருக்கிறது திரைக்கதை.

தான் காதலில் விழுந்த கீர்த்தி சுரேஷைக் காப்பாற்ற திருநெல்வேலிக்கு புறப்படுகின்றார் பைரவா விஜய். அங்கு அவர் வில்லன் கோஷ்டியை இடைவேளைக்குப் பின்னர் அதகளப்படுத்துவதுதான் இரண்டாம் பாகம்.

திருநெல்வேலி சொதப்பல்கள்

Bairavaa.jpg-vijay

விஜய் திருநெல்வேலி வந்ததும் தொடரும் திரைக்கதையிலும் நம்ப முடியாத பல அம்சங்கள்.

அத்தனை பலம் வாய்ந்த வில்லன் விதம் விதமான வடிவங்களில் செய்யப்பட்ட ஆயுதங்களுடன் அனுப்பும் அடியாட்கள் அத்தனை பேரையும் ஒற்றை ஆளாகத் துவம்சம் செய்கிறார் விஜய்.

இடையிடையே மக்களுக்கும், படத்தில் வரும் கதாபாத்திரங்களுக்குமாகச் சேர்த்து அறிவுரைகளை அள்ளி வழங்குகின்றார். நீதிமன்றத்தில் சமூகத்தில் நடக்கும் அவலங்களைப் பக்கம் பக்கமாக சாடுகிறார்.

ஆனால், இதற்கு முன்னர் எத்தனையோ படங்களில் பார்த்துவிட்ட கல்வித் தந்தை என்ற போர்வையில் கல்லூரி நடத்துபவர்களின் அட்டூழியங்கள் என்பதால், இரசிக்க முடியவில்லை. ஏற்கனவே பார்த்த படங்களின் சில  திரைக்கதை அம்சங்களை உருவி எடுத்துக் கோர்த்த தொகுப்பாக இருக்கிறது பைரவா.

இருப்பினும் இடையிடையே சில சுவாரசியங்களும், சுவையான திருப்பங்களும், படத்தில் இல்லாமல் இல்லை!

படத்தின் வித்தியாசங்கள்

Bairavaa-Vijay-and-Keerthy-Suresh-

விஜய்க்கு இதில் குடும்பமோ, உறவினர்களோ யாருமே இல்லாமல் கதை பின்னியிருக்கிறார்கள். இது வித்தியாசமாக இருந்தாலும், இரசிகர்களுக்கு ஏமாற்றமாகவும் இருக்கலாம்.

கீர்த்தி சுரேஷின் முகபாவனைகள், கண்சிமிட்டல்கள் இரசிக்கும்படி இருந்தாலும், இன்னும் கொஞ்சம் அவரைப் பயன்படுத்தியிருக்கலாமோ எனத் தோன்றுகின்றது.

வெளிநாட்டுப் பாடல் காட்சியில் பனி படர்ந்த மலை முகடுகளில் தலைமுதல் கால்வரை முழுக்க முழுக்கப் போர்த்திக் கொண்டு நடித்த முதல் தமிழ் நடிகை கீர்த்தி சுரேஷாகத்தான் இருக்கும்! அந்த விட்டுக் கொடுக்காத தன்மைக்காக அவரைப்  பாராட்டலாம்! தமன்னாக்கள் கவனிக்க!

Bairava-images-pg

வில்லன் கோட்டை வீரனாக வரும் டேனியல் பாலாஜியின் மனைவி மீதான கரிசனம் மற்றொரு வித்தியாச இடை சொருகல். படத்தின் பிரதான வில்லன் ஜெகபதி பாபுவை விட, டேனியல் பாலாஜியின் பாத்திர அமைப்பு கவர்கிறது.

காட்டுமிராண்டி போலீசாக மிரட்டலாக அறிமுகமாகும் ஹரிஷ் உத்தமன், ஏதோ செய்யப் போகிறார் என்றும் பார்த்தால், சடாரென்று மனம் திருந்துகின்றார். மகளைக் கடத்தியதுமே மிரண்டு போய் அடங்குவதும், விஜய்யை துணைக்கு அழைப்பதும் அவரைச் சிரிப்புப் போலீசாக்கி விட்டன.

சிரிப்பை வரவழைக்கும் ‘சிரிப்பு வாயுவை’ பொருத்தமாக சில இடங்களில் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

Bairavaa-vijay-sathishவிஜய்யுடன் இணைந்து நகைச்சுவை வழங்கிய சதீஷ்….

இடைவேளைக்குப் பின்னர் திருநெல்வேலிக்கு வரும் விஜய் வில்லனுடன் நேரடியாக மோதாமல், புத்திசாலித்தனமாக சில காரியங்கள் செய்வது கவர்கிறது. ஆனால், இயக்குநருக்கே இந்த அணுகுமுறையில் அவ்வப்போது சந்தேகம் வர, மீண்டும் விஜய்யை பல வடிவங்களில் அமைக்கப்பட்ட ஆயுதங்களுடன் வரும் வில்லன்களோடு மோதவிடுகின்றார்.

அடிக்கடி வில்லன் யாரையாவது கடத்திக் கொண்டு போய் மிரட்டுவதும், அவரது அடியாளாக வரும் டேனியல் பாலாஜி, புதுடில்லியிலிருந்து வரும் உயர் அரசாங்க அதிகாரிகளிடம் கூட துப்பாக்கியை எடுத்து நீட்டுவதும், நம்ப முடியாததாக இருக்கிறது.

இறுதிக் காட்சியில் மீண்டும் கொஞ்சம் புத்திசாலித்தனமான காட்சியமைப்புகளால் வில்லனை விஜய் ஒழித்துக் கட்டுவதும் வித்தியாசம்தான்.

பாடல்கள் சுமார் – ஒளிப்பதிவு தரம்

பின்னணி இசையை இரசிக்கும்படி அமைத்திருந்தாலும், பாடல்களில் கோட்டை விட்டு விட்டார் சந்தோஷ் நாராயணன். எந்தப் பாடலும் மனதில் நிற்கவில்லை.

ஒளிப்பதிவு தரமாக இருக்கிறது.

ஒரே ஒரு வில்லனை வைத்துப் பின்னப்பட்ட விஜய்யின் ‘கில்லி’ ஏற்படுத்திய தாக்கம் இன்னும் நம் நினைவில் நிற்கின்றது. ஆனால், இத்தனை வில்லன்கள் இருந்தும் நம் மனதில் நிற்கவில்லை பைரவா.

செமையான – சிறப்பான பொங்கல் விருந்து – விஜய் இரசிகர்களுக்கு மட்டும்!

சினிமா இரசிகர்களுக்கு அல்ல!

-இரா.முத்தரசன்