Home Featured நாடு “சகோதரத்துவத்துடன் ஒற்றுமைத் திருநாளாகக் கொண்டாடுவோம்” – சுப்ராவின் பொங்கல் வாழ்த்து

“சகோதரத்துவத்துடன் ஒற்றுமைத் திருநாளாகக் கொண்டாடுவோம்” – சுப்ராவின் பொங்கல் வாழ்த்து

741
0
SHARE
Ad

Subramaniamகோலாலம்பூர் – இன்று கொண்டாடப்படும் பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் மலேசிய சுகாதார அமைச்சரும் ம.இ.கா தேசியத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம், இந்நன்னாளை அனைவரும் சகோதரத்துவத்துடனும், ஒற்றுமைத் திருநாளாகவும் கொண்டாடி மகிழ்வோம் எனத் தெரிவித்துள்ளார்.

டாக்டர் சுப்ராவில் பொங்கல் வாழ்த்துச் செய்தி பின்வருமாறு:=

“உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனம் செய்வோம்” என்று பாடிய மகாகவி பாரதியாரின் சொல்லிற்கு ஏற்ப உழைப்பிற்கு உயர்வு தேடித் தரும் உழவுத் தொழிலைப் போற்றும் விழாவாக பொங்கல் திருநாள் அமைந்துள்ளது. இந்நன்னாளில் உணவு படைக்கும் உழவர்களுக்கு உரிய மரியாதையையும் நன்றியையும் செலுத்தும் பொருட்டு பொங்கல் திருநாள் அறுவடைத் திருநாளாகவும் கொண்டாடப்படுகிறது. இவ்வாறு சிறப்புற அமைந்த பொங்கல் பண்டிகையை நாம் தமிழர் திருநாளாகவும் கொண்டாடி வருவதும் ஒரு மரபு.

#TamilSchoolmychoice

பொங்கல் பண்டிகையின் முதல் நாளான போகிப் பண்டிகையில் “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே” எனும் முதுமொழிக்கேற்ப பழைய பொருட்களை எரிக்கும் பழக்கம் நம்மிடையே காலம் காலமாக இருந்து வருகின்றது. ஆனால், அது வெறும் பொருட்களை மட்டும் எரிப்பதோடு நின்று விடாது, காலத்திற்கு உதவாத, பயன்படாத, வளர்ச்சிப் பாதையில் நடைபோடாத அனைத்து எண்ணங்களையும் செயல்களையும் தவிர்த்து, காலத்திற்கேற்ப மேம்படுத்திக் கொண்டு, வளர்ச்சிப் பாதையில் நடைபோடும் வகையில், பழையதோடு புதியவற்றையும் ஏற்றுக் கொண்டு சிந்தனை மாற்றத்தைக் கொண்டு வரவேண்டிய நேரமிது.

தொடர்ந்து மூன்று நாட்களுக்குக் கொண்டாடப்படும் இப்பொங்கல் திருநாளில் தமிழர்கள் இயற்கை நேயம், உயிர் நேயம், மாந்த நேயம் என அனைத்திற்கும் மரியாதைச் செலுத்திக் கொண்டாடுவதே இத்திருநாளின் மிகப்பெரிய சிறப்பாகும். சூரிய பொங்கல் அன்று இயற்கையை வணங்கி, மாட்டுப் பொங்கல் அன்று உழவுத் தொழிலுக்கு உதவும் உயிர்களுக்கு மதிப்பளித்து, காணும் பொங்கல் அன்று உற்றார் உறவினர், சுற்றத்தார் என அனைவரிடைத்திலும் மனித நேயத்தை வளர்த்துக் கொண்டாடும் மரபும் தமிழர்களிடையே அன்று தொட்டு இருந்து வருவது மிகவும் பெருமைக்குரியது. இத்தகைய சிறப்பு நிறைந்த இத்திருநாளை இனி வரும் காலங்களிலும் தொடர்ந்து நிலைபெறச் செய்ய வேண்டியது தமிழர்களின் தலையாய கடமையாகும்.

“தை பிறந்தால் வழி பிறக்கும்” என்ற முதுமொழி வாழ்க்கையின் நம்பிக்கையைக் குறிக்கின்றது. செழிப்பான தை மாதம் அனைவரது வாழ்விலும் செழிப்பான காலத்தைக் கொண்டு வரும் என்பதும் நம்பிக்கை. எனவே தற்பொழுது நாட்டு மக்கள் எதிர்நோக்கியுள்ள இடர்கள் நீங்கி நல்வழிப் பிறக்கும் என்று அனைவரும் நம்பிக்கை கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி, இவ்வாண்டு தைத்திருநாளானது எல்லோரது வாழ்விலும் புதியதொரு வழியைத் தோற்றுவித்து, அவர்களின் நற்காரியங்கள் அனைத்தும் ஈடேறவும் வேண்டும். மேலும், அனைவரும் வாழ்க்கையிலும் பொருளாதாரத்தில் நல்லதொரு முன்னேற்றத்தைக் கண்டு, வெற்றிகளைக் குவிக்கும் ஆண்டாக அமைய வேண்டும் என நான் இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவரும் உவகையுடன் கொண்டாடும் இந்த பொங்கல் திருநாளில் அனைவரும் வேறுபாடுகளை மறந்து சகோதரத்துவத்துடன் ஒற்றுமைத் திருநாளாகக் கொண்டாடி மகிழ வேண்டும். ‘இல்லங்கள் தோறும் பொங்கட்டும் பொங்கல்; இதயங்கள் தோறும் தங்கட்டும் இன்பங்கள்’ எனக்கூறி எனது மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை உளமார தெரிவித்துக் கொள்கிறேன்”