Home Featured நாடு “நீதிமன்றத் தீர்ப்பை திரிக்க வேண்டாம்!தலைமைத்துவத்தில் மாற்றமுமில்லை!” – மஇகா பதிலறிக்கை!

“நீதிமன்றத் தீர்ப்பை திரிக்க வேண்டாம்!தலைமைத்துவத்தில் மாற்றமுமில்லை!” – மஇகா பதிலறிக்கை!

587
0
SHARE
Ad

Lawyer Nadarajan-கோலாலம்பூர் – அண்மையில் முன்னாள் மஇகா உறுப்பினர்களாகிய ஏ.கே.இராமலிங்கம் மற்றும் 7 பேர் கொண்ட குழுவினர் சங்கப் பதிவகத்திற்கு எதிராகத் தொடுத்துள்ள வழக்கில், வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து முரண்பட்ட அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளதால் பொதுமக்களிடத்தில் ஏற்பட்டுள்ள சில குழப்பங்களை தெளிவுபடுத்தி மஇகா தலைமையகத்தின் சட்டக் குழு சார்பில், வழக்கறிஞரும், மத்திய செயலவை உறுப்பினருமான இரா.நடராஜன் (படம்) விரிவான விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கின்றார்.

வழக்கின் சாராம்சங்கள் என்ன?

“சங்கப் பதிவக அதிகாரிகளுக்கு எதிராகத் தொடுக்கப்பட்டுள்ள வழக்கு கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் கடந்த ஜூலை 2016-இல் விசாரணைக்கு வந்தபோது சங்கப் பதிவகம்-மஇகா சார்பில் எழுப்பப்பட்ட பூர்வாங்க ஆட்சேபணைகளைத் தொடர்ந்து அந்த வழக்கை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அந்தத் தீர்ப்புக்கு எதிராக செய்யப்பட்ட மேல்முறையீடு மீதுதான் கடந்த 10 ஜனவரி 2017-ஆம் தேதி மேல்முறையீட்டு நீதிமன்றம் (கோர்ட் ஆஃப் அப்பீல்) தனது தீர்ப்பை வழங்கியிருந்தது. இந்தத் தீர்ப்பின் முக்கிய அம்சம் என்னவென்றால், இந்த வழக்கின் முழுவிசாரணை இன்னொரு நீதிபதியின் முன்னிலையில் மீண்டும் நடைபெற வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதுதான். இதற்கு மாறாக, பலரும் திரித்து அறிக்கை விடுவதுபோல் மேல்முறையீட்டு நீதிமன்றம் வழக்கின் உள்ளம்சங்கள் குறித்தோ, தன்மைகள் குறித்தோ, வழக்கில் எந்தத் தரப்பு சரி, எந்தத் தரப்பு தவறு செய்தார்கள் என்பதுபோன்ற வியாக்கியானங்கள் எதையும் செய்யவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகின்றோம்” என மஇகா சட்டக் குழுவின் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் நடராஜன் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

MIC logo“ஒரு சில தரப்புகள் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை தவறுதலாக திரித்து, சங்கப் பதிவகத்தின் உத்தரவுகள் சட்டப்படி செல்லாது என்பது போலவும், அதைத் தொடர்ந்து சங்கப் பதிவகத்தின் மறு-தேர்தல் குறித்த உத்தரவுகளும், நடத்தப்பட்ட மறு-தேர்தல் முடிவுகளும் செல்லாது என்பது போலவும் வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள். சட்டப்படியும், உண்மையாகவும் பார்த்தால் இது போன்று வழக்கின் தீர்ப்பை அர்த்தப்படுத்துவது எந்தவித அடிப்படையும் இல்லாதது என்பதோடு இந்தத் தீர்ப்பை அரசியலாக்கும் உள்நோக்கம் கொண்டது என்பதையும் வலியுறுத்த விரும்புகிறோம்” என்றும் அவர் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

2015-இல் நடைபெற்ற மறு-தேர்தலின் வழி மஇகாவின் தேசியத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் மற்றும் அவரது தலைமைத்துவத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்களும் அதிகாரபூர்வமாகவும், சட்டப்படியும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்பதோடு, தொடர்ந்து அந்தப் பதவிகளை எந்தத் தடையும் இன்றி வகித்து வருவார்கள் என்பதிலும் எந்தவித ஐயப்பாடும் இல்லை என்றும் மஇகா சட்டக் குழுவின் அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது..

நடத்தப்பட்ட மறு-தேர்தல் மேற்குறிப்பட்ட பதவிகளுக்கும் மட்டுமின்றி கட்சியின் கிளைகள், தொகுதிக் காங்கிரசுகள், இளைஞர், மகளிர் பிரிவுகள், புத்திரா, புத்திரி பிரிவுகள் என அனைத்து நிலைகளுக்குமான தேர்தல்களும் சங்கப் பதிவகத்தின் உத்தரவுகளின்படியும், மஇகா சட்டவிதிகளின்படியும்  நடந்தது என்பதை இந்தத் தருணத்தில் சுட்டிக் காட்ட விரும்புவதாகவும், நடராஜன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

“இந்த மறு-தேர்தல்களின் முடிவுகளும் சங்கப் பதிவகத்தால் அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது என்பதையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம். எனவே, மஇகாவின் நடப்புப் பொறுப்பாளர்கள் அனைவரும் சட்டப்படியும், கட்சியின் சட்டவிதிகளுக்கு ஏற்பவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்” என்பதைச் சுட்டிக் காட்டியுள்ள நடராஜன், “கடந்த 10 ஜனவரி 2017-ஆம் தேதி வழங்கப்பட்ட மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக கூட்டரசு நீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்யும் கால அவகாசம் மஇகாவுக்கும்-சங்கப் பதிவகத்திற்கும் இன்னும் இருக்கிறது என்பதையும், கூட்டரசு நீதிமன்றத்தின் முன் ஒப்புதல் கிடைத்தால், இந்த வழக்கின் மேல் முறையீடு கூட்டரசு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெறும்” என்றும் கூறியுள்ளார்.

“ஆனால், அவ்வாறு கூட்டரசு மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு முறையீடு செய்யாவிட்டால், மீண்டும் கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் நடைபெறவிருக்கும் முழு விசாரணையையும் மஇகா, சட்டப்படியும் எந்தவித தயக்கமும் இன்றி எதிர்கொள்ளும். அவ்வாறு நடைபெறப் போகும் வழக்கின் இறுதித் தீர்ப்பை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் வழங்கியவுடன் அந்தத் தீர்ப்பை ஏற்றுக் கொள்ள விரும்பாத தரப்பு, மீண்டும் மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கும், அதைத் தொடர்ந்து கூட்டரசு நீதிமன்றத்திற்கும் மேல்முறையீடு செய்ய முடியும். எனவே, இந்த வழக்கின் முழு விசாரணைகளும், சட்டபூர்வ அம்சங்களும் விசாரிக்கப்படுவதற்கும், அதன் மீதான இறுதித் தீர்ப்புகளை பெறுவதற்கும், நீதித்துறையின் அனைத்து வாய்ப்புகளையும் முழுமையாகப் பயன்படுத்தித் கொள்வதற்கும் மேலும் பல மாதங்கள் காலம் பிடிக்கும்” என்றும் மஇகா சட்டக் குழுவின் அறிக்கை விளக்கியுள்ளது.

“எனவே, அதற்குள்ளாக மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை தவறாக அர்த்தப்படுத்தி திரித்துக் கூறுவதும், இதனை அரசியலாக்க முயற்சி செய்வதும், கட்சியின் அதிகாரபூர்வ அமைப்பு மீதும், தலைமைத்துவம் மீதும் கேள்வி எழுப்பும், களங்கம் ஏற்படுத்தும் செயல்களாகும். எனவே, கட்சியின் தேசியத் தலைவரும், மற்ற பதவிகளை வகிக்கும் பொறுப்பாளர்களும் சட்டபூர்வமாகவும், முறைப்படியும் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி வகிக்கின்றார்கள் என்பதும், 10 ஜனவரி 2017-இல் வழங்கப்பட்ட மேல்முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பின் காரணமாக அவர்களின் பதவிகளுக்கோ, கட்சியின் அமைப்புக்கோ எந்தவிதத்திலும் பாதிப்பு இல்லை என்பதும் ஆழ்ந்த சட்டப் பரிசீலனைக்குப்  பின்னர் மஇகா சட்டக் குழுவினரின் எடுத்துள்ள முடிவாகும்” என்றும் நடராஜனின் அறிக்கை வலியுறுத்தியுள்ளது.