ஜோகூர்பாரு: தனது மாநிலத்தில் சீனா செய்து வரும் முதலீடுகளுக்கு எதிரான கருத்துகளை அரசியல் சாயம் பூசி பரப்பி வரும் சில அரசியல்வாதிகளை ஜோகூர் சுல்தான் இப்ராகிம் இப்னி அல்மாஹ்ரும் சுல்தான் இஸ்கண்டார் கடுமையாகச் சாடியுள்ளார்.
குறிப்பாக, ஜோகூரைப் பொறுத்தவரை மலேசிய நாட்டின் நலன்களை விட சொந்த அரசியல் நலன்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கும் முன்னாள் பிரதமர் துன் மகாதீரை அவர் சுட்டிக் காட்டினார்.
ஸ்டார் ஆங்கில நாளேட்டுக்கு வழங்கியுள்ள பிரத்தியேக நேர்காணலில் “நான் பொறுத்திருந்து பொறுமை இழந்து விட்டேன். மகாதீரும் அவரது தரப்பினரும் போரெஸ்ட் சிட்டி (Forest City) என்ற திட்டம் குறித்து சர்ச்சைகள் எழுப்பி வருகின்றனர். சீனாவைச் சேர்ந்த 7 இலட்சம் சீனர்கள் ஜோகூரில் நிரந்தரமாகத் தங்கி விடுவர் என்றும், அவர்களுக்கு குடியுரிமைகள் வழங்கப்படும் என்றும் பெரிய நிலங்கள் அவர்களுக்கு விற்கப்பட்டிருப்பதாகவும் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். இவையெல்லாம் அளவுக்கு மீறிய குற்றச்சாட்டுகள்” என சுல்தான் தனது நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
“போரெஸ்ட் சிட்டி திட்டம் கடல் பரப்பில் இருந்து மீட்கப்படும் நிலத்தின் மீது கட்டப்படும் திட்டம். இது பெரும்பாலும் அடுக்குமாடி குடியிருப்புக் கட்டிடங்களைக் கொண்டது. இதை வாங்குபவர்கள் இதனைக் கையில் எடுத்துக் கொண்டு தங்கள் நாட்டுக்குக் கொண்டு போக முடியுமா?” என்றும் சுல்தான் கேள்வி எழுப்பினார்.
“இந்த விவகாரத்தை சிங்கப்பூரை நாம் பிரிட்டிஷாருக்குத் தாரை வார்த்துக் கொடுத்ததற்கு ஒப்பிட்டு, இதனால் நாம் நமது நில உரிமையை இழந்து விட்டோம் என்று கூறுவதும், சீனாவிடம் நிலத்தைத் தாரை வார்த்துக் கொடுக்கிறோம் என்று கூறுவதும் ஏற்றுக் கொள்ள முடியாது. நான் அரசியலில் தலையிட விரும்பவில்லை. ஆனால் குறுக்கு சிந்தனை கொண்ட சிலர் மக்களைத் திசை திருப்புவதற்காக உண்மை நிலவரங்களை மாற்றிக் கூறும்போது, அதைத் திருத்த வேண்டியது எனது கடமையாகும்” என்றும் ஜோகூர் சுல்தான் கூறியுள்ளார்.