ஜோகூர்பாரு – சிங்கைக்குள் நுழையும் ஒவ்வொரு மலேசியக் காருக்கும் எதிர்வரும் பிப்ரவரி, 15-ஆம் தேதி முதல் சிங்கை குடிநுழைவுப் பகுதியில் மலேசிய ரிங்கிட் 20 கட்டணம் வசூலிக்கப்படும். ஏறத்தாழ 6.40 சிங்கப்பூர் வெள்ளிக்கு இது சமமாகும்.
வெளிநாட்டுப் பதிவு எண்களைக் கொண்டு, துவாஸ் மற்றும் உட்லண்ட்ஸ் குடிநுழைவு வாயில்கள் வழியாக சிங்கப்பூருக்குள் வரும் எல்லா கார்களுக்கும் இந்தக் கட்டணம் விதிக்கப்படும் என சிங்கப்பூர் தரைப்போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது.
ஏற்கனவே, சிங்கப்பூருக்குள் நுழையும் வெளிநாட்டுக் கார்களுக்கு, நுழைவுக் கட்டணமாக (Vehicle Entry Permit ) 35 சிங்கப்பூர் வெள்ளி விதிக்கப்படுகின்றது. இதைத் தவிர சாலைவரிக் கட்டணங்கள் (டோல்), மின்னியல் சாலை வரி (Electronic Road Pricing -ERP) ஆகியவற்றையும் வெளிநாட்டு வாகனங்கள் செலுத்த வேண்டும். தற்போது கூடுதலாக புதிய 20 ரிங்கிட் கட்டணம் விதிக்கப்படுகின்றது.
கடந்த ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதி முதல் ஜோகூருக்குள் நுழையும் சிங்கப்பூர் கார்களுக்கு 20 ரிங்கிட் கட்டணத்தை மலேசிய அரசாங்கம் விதிக்கத் தொடங்கியுள்ளதைத் தொடர்ந்து, அதற்கு பதில் நடவடிக்கையாக சிங்கப்பூர் அரசாங்கம் இந்தப் புதிய கட்டணத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
சிங்கப்பூருக்குள் நுழையும் கார்கள் நுழைவுக்கட்டணம் செலுத்தும் அதே இடத்தில் இந்த 20 ரிங்கிட் கட்டணத்தையும் செலுத்திக் கொள்ளலாம்.