சென்னை – ஜல்லிக்கட்டு விவகாரத்தில் இன்று வியாழக்கிழமை காலை தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்த பின்னர் சென்னை திரும்பியதும் எடுக்கப்படவிருக்கும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்த பரபரப்புகள் ஏற்பட்டுள்ளன.
தற்போது 53 மணி நேரத்தைக் கடந்தும் கொஞ்சம் கூட மசியாமல் – யாருக்கும் அசைந்து கொடுக்காமல் – மெரினா கடற்கரையை ஆக்கிரமித்திருக்கும் தமிழர் கூட்டம் 1 இலட்சம் பேரையும் விட கூடுதலாக இருக்கும் என மதிப்பிடப்படுகின்றது.
தற்போது பிரச்சனை, தமிழக அரசுக்கும், உச்ச நீதிமன்றத்திற்கும் இடையிலானது என்ற அளவில் நிலைமை மாறியுள்ளது. மத்திய அரசு பிரச்சனையை தமிழக அரசின் முடிவுக்கு விட்டு விட்டது.
இனி தமிழக அரசு ஒரு நாளாவது ஜல்லிக்கட்டை நடத்தி அதன்மூலம் எதிர்வரக் கூடிய பிரச்சனைகளைச் சமாளித்தாக வேண்டும் – உச்ச நீதிமன்றத்தின் கண்டிப்பையும் சந்தித்தாக வேண்டும் – என்ற நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
ஒரு நாளாவது ஜல்லிக்கட்டு நடத்தப்படாமல் நாங்கள் போராட்டக் களத்தை விட்டு விலக மாட்டோம் என ஆர்ப்பாட்டக்காரர்கள் விடாப்பிடியாக இருப்பதால், ஜல்லிக்கட்டை ஒருநாளாவது நடத்திவிட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில் வாடகை வண்டிகள் (டாக்சி), ஆட்டோ ரிக்ஷா வண்டிகள் ஆகியவற்றின் சங்கங்களும் போராட்டத்தில் குதிப்பதால், இந்த வாகனங்களும், மற்றும் லாரிகளும் நாளை சேவையில் ஈடுபடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை வழக்கறிஞர்களும் போராட்டத்தில் குதிப்பதால், சென்னை நீதிமன்றங்களில், வழக்குகளில் வழக்கறிஞர்கள் ஆஜராக மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை தமிழ்த் திரைப்பட உலகினரும் போராட்டத்தில் குதிக்கின்றனர்.
-செல்லியல் தொகுப்பு