கிள்ளான் – மலேசியத் தமிழ்ப் பண்பாட்டியக்கத்தின் ஏற்பாட்டில் “கவிதையும் வாழ்வும்” என்ற இலவச சிறப்பு நிகழ்ச்சி நாளை திங்கட்கிழமை (பொதுவிடுமுறை) 30 ஜனவரி 2017-ஆம் நாள், கே.பி.எஸ். பயண நிறுவனம், முதல் மாடி, கிள்ளான், சிலாங்கூர் என்ற இடத்தில் நடைபெறுகின்றது.
காலை 9.30 மணிக்குத் தொடங்கும் இந்த நிகழ்ச்சி உலகத் தமிழ்ப் பண்பாட்டியக்கத்தின் தலைவர் ப. கு. சண்முகம் தலைமையில் நடைபெறும்.
நிகழ்ச்சியில் காலைச் சிற்றுண்டியும், மதிய உணவும் வழங்கப்படும்.
பல சிறப்பு அங்கங்களுடன் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் “மாந்தர் வாழ்விலும் கல்வித் துறையிலும் கவிதை பெறும் இடம்” என்ற தலைப்பில் முனைவர், முரசு. நெடுமாறன் (படம்) உரை நிகழ்த்துவார்.
“கவிதையும் வாழ்வும்” நிகழ்ச்சிக்கு செந்தமிழ்ச் செல்வர் ஓம்ஸ் தியாகராஜன் முன்னிலை வகிப்பார்.
“டென்மார்க்கில் தமிழரும் தமிழும்” என்ற தலைப்பில் உலகத் தமிழ்ப் பண்பாட்டியக்கத்தின் பொதுச் செயலாளர் தருமன் தருமகுலசிங்கம் சிறப்புரை நிகழ்த்துவார்.
மலேசியாவின் பிரதமர் துறையில் ‘சிடேக்’ (SEDIC) நல்கை மூலம் தமிழாசிரியர்களுக்கு நாடெங்கும் நடத்தப்பெற்ற கவிதைப் பயிலரங்கின் சாரமாக மேற்படி நிகழ்வு அமையும். பல்வகைப் பயன்களை நல்கும் இந்நிகழ்வில் கலந்து பயனெய்துமாறு மலேசியத் தமிழ்ப் பண்பாட்டியக்கம் தமிழ் ஆர்வலர்களை அன்புடன் அழைக்கின்றது.