கோத்தா கினபாலு – கடந்த சனிக்கிழமை புலாவ் மெங்காலும் அருகே நடந்த படகு விபத்தில், மொத்தம் 27 சீனப் பயணிகள் மட்டுமே இருந்தனர் என்று காவல்துறை உறுதிபடுத்தியுள்ளது.
விபத்தில் மாயமாகிவிட்டதாக நம்பப்பட்ட லி சுன் (வயது 33) என்ற பயணி கடைசி நிமிடத்தில் அப்படகில் ஏறவில்லை என்றும் சபா காவல்துறை ஆணையர் டத்தோ ரம்லி டின் தெரிவித்துள்ளார்.
படகில் அதிக ஆட்கள் இருந்ததால், தான் அப்படகில் ஏறுவதைத் தவிர்த்துவிட்டதாக காவல்துறையிடம் லி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மாயமான மொத்த பயணிகள் 4 பேர் என்றும், அவர்களில் ஒருவர் படகில் பணியாற்றிய மலேசியர் என்றும் ரம்லி டின் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, இவ்விபத்தில் மீட்கப்பட்டுள்ள 20 சீனப் பயணிகள், குயின் எலிசபெத் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் 8 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். 12 பேர் இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.