Home Featured கலையுலகம் திரைவிமர்சனம்: ‘போகன்’ – அரவிந்த் சுவாமி, ஜெயம்ரவியின் விறுவிறுப்பான ஆடு புலி ஆட்டம்!

திரைவிமர்சனம்: ‘போகன்’ – அரவிந்த் சுவாமி, ஜெயம்ரவியின் விறுவிறுப்பான ஆடு புலி ஆட்டம்!

1300
0
SHARE
Ad

Bogan4 கோலாலம்பூர் – ‘தனி ஒருவன்’  திரைப்படத்தில், ‘ஜெயம்ரவி – அரவிந்த் சுவாமி’ கூட்டணி ஆடிய ‘போலீஸ் – திருடன்’ விளையாட்டு, அப்படியே ‘போகன்’ திரைப்படத்திலும் தொடர்ந்துள்ளது.

ஜெயம்ரவி… அதே உடற்கட்டு, அதே நடிப்பு, அதே கோபம், வேகம் எல்லாமுமாக, இந்தப் படத்திலும் ‘விக்ரம்’ என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவருக்கு இணையாக ‘ஆதித்யா’ என்ற கதாப்பாத்திரத்தில் வில்லனாக நடித்திருக்கிறார் அரவிந்த் சுவாமி. வில்லன் என்றால் ‘சித்தார்த் அபிமன்யு’ அளவிற்கா? என்றால்.. இல்லை ‘அதுக்கும் மேலே’ என்று சொல்ல வைத்திருக்கிறார்.

விரல் சொடுக்கி நடப்பது, கண்களால் மயக்குவது என வில்லனாகவும், ‘உனக்கு ஒன்னும் ஆகக் கூடாது மகா’ எனக் கண்ணீர்விட்டுக் கலங்கும் காதலனாகவும் இரண்டு வித முகபாவனைகளையும் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார் அரவிந்த் சுவாமி.

#TamilSchoolmychoice

அதே பொறுப்பு ஜெயம்ரவிக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இருவரில் யார் சிறப்பாக நடித்திருக்கிறார்கள் என்பது ரசிகர்களிடமே விடப்பட்டுள்ளது.

Bogan-38கதைப்படி, அரவிந்த் சுவாமி ஒரு அரச குடும்ப வாரிசு. ஆனால் அவரது தாத்தா காலத்திலேயே பெரும்பாலான சொத்துக்களை அரசாங்கம் எடுத்துக் கொள்ள, தந்தை காலத்தில் அதுவும் தீர்ந்து, குடும்பம் நடுத்தெருவுக்கு வந்துவிட, சிறு வயதில் ராஜபோக வாழ்க்கை வாழ்ந்த அரவிந்த் சுவாமியால், ஒரு சாதாரண வாழ்க்கை வாழ முடியவில்லை.

அதற்காக அவர் சில மாய வித்தைகளை செய்து, நகைக்கடை, வங்கி போன்றவற்றில் கொள்ளையடிக்கிறார். அந்த கொள்ளைச் சம்பவத்தில் காவல்துறை துணை ஆணையரான ஜெயம்ரவியின் தந்தை நரேன் மீது திருட்டுப் பழி விழுந்து விடுகின்றது.

வீண் திருட்டுப் பழியைச் சுமந்து சிறைக்குச் செல்லும் தனது தந்தையை மீட்க ஜெயம்ரவி எடுக்கும் முயற்சியில், அரவிந்த் சுவாமி யார் என்பது? தெரியவருகின்றது. அதன் பின்னர் படம் முடியும் வரை போலீஸ் ஜெயம்ரவிக்கும், வில்லன் அரவிந்த் சுவாமிக்கும் இடையில் நடக்கும் ஆடு புலி ஆட்டம் தான் ‘போகன்’.

Bogan1கதாநாயகியாக ஹன்சிகாவிற்கு நடிப்பதற்கான இடம் அறிமுகக் காட்சியிலேயே முடிந்துவிடுகின்றது. அதன் பின்பு ஆங்காங்கே கொஞ்சம் கவர்ச்சிக்காகவும், கதை ஓட்டத்திற்காகவும் பயன்படுத்தப்பட்டிருக்கிறார். அறிமுகக் காட்சியில் குடித்துவிட்டு ஹன்சிகா பண்ணும் லூட்டி ரசிக்க வைக்கின்றது. நடிப்பதற்குக் கிடைத்த அந்த 10 நிமிடக் காட்சியை நன்றாகப் பயன்படுத்தியிருக்கிறார்.

படத்தில், நாசர், நரேன், பொன்வண்ணன், நாகேந்திர பிரஷாத், அக்‌ஷரா கவுடா, வருண் ஆகியோரின் நடிப்பும், அவர்களின் கதாப்பாத்திரங்களும் அருமை.

திரைக்கதை

முதற்பாதி கதையமைப்பு அருமை..  கொள்ளையடிப்பதற்காக அரவிந்த் சுவாமி செய்யும் தந்திரங்கள், கண்ணால் காட்டும் வித்தைகள் மிகவும் ரசிக்க வைக்கின்றன. ‘ஆதித்யா’ கதாப்பாத்திரத்திற்கு என்று ஒருவித வித்தியாசமான உடல்மொழியை வைத்திருப்பதும், அதை ஆங்காங்கே ‘வேறு ஒரு வகையில்’ வெளிப்படுத்தியிருப்பதும் அருமை.

Bogan3ஜெயம்ரவி, அரவிந்த் சுவாமி இருவருக்கும் நடிப்பதற்கு சமமான வாய்ப்புகளைக் கொடுத்து ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தைக் கொடுத்திருக்கும் இயக்குநர் லஷ்மணின் திறமை பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

என்றாலும், வில்லனுக்குக் கொடுத்த புத்திசாலித்தனங்களில் பாதியையாவது ஹீரோவுக்கும், போலீஸ் கதாப்பாத்திரங்களுக்கும் கொடுத்திருக்கலாம். வில்லன் போடும் திட்டங்களை முறியடிக்க திறனின்றி ஹீரோ அடிவாங்கிக் கொண்டே இருப்பது சலிப்பை ஏற்படுத்துகின்றது.

கிளைமாக்ஸ் காட்சியில் ஒன்றுமே செய்யாமல் ஒட்டுமொத்த போலீசும் வேடிக்கைப் பார்ப்பது நம்பும்படியாக இல்லை.

ஒளிப்பதிவு, இசை

Boganசௌந்தராஜன் ஒளிப்பதிவில் காட்சிகள் அழகு. குறிப்பாக, ‘செந்தூரா’ பாடல் காட்சியில் பின்னால் வெடித்துச் சிதறும் வண்ணங்கள் மிகவும் அருமை.

டி.இமானின் பின்னணி இசை காட்சிகளுக்கு விறுவிறுப்பையும், சுவாரசியத்தையும் கூட்டியுள்ளது. அதே போல் பாடல்களும் சட்டென மனதில் தங்கிவிடும் படியாக உள்ளன.

மதன் கார்க்கி, தாமரை வரிகளில் பாடல் வரிகள் இனிமை.

மொத்தத்தில், போகன் – அரவிந்த் சுவாமி, ஜெயம்ரவியின் ஆடு புலி ஆட்டம் என்பதோடு, வித்தியாசமான திரை அனுபவத்தையும் கொடுக்கிறது.

-ஃபீனிக்ஸ்தாசன்