சிங்கப்பூர் – சிங்கப்பூர் ஏர்லைன்சைச் சேர்ந்த பெண் விமானப் பணியாளரான வெனிசா யாப், சான் பிரான்சிஸ்கோ தங்குவிடுதியில் உள்ள அறை ஒன்றில், கடந்த செவ்வாய்க்கிழமை பிணமாகக் காணப்பட்டுள்ளார்.
மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் பிறந்தவரான வெனிசா யாப், சிங்கப்பூரிலிருந்து சான் பிரான்சிஸ்கோ நகருக்குச் செல்லும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் தலைமைப் பணியாளராகப் பணியாற்றி வந்துள்ளார்.
கடந்த வாரம் அவ்விமானம் சான் பிரான்சிஸ்கோ நகரை அடைந்த போது, தனக்கு உடல்நிலை சரியில்லை என்று வெனிசா கூறியதாக அவருடன் பணியாற்றியவர்கள் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இரண்டு நாட்களுக்குப் பிறகு, நேற்று பிப்ரவரி 1-ம் தேதி, அதிகாலை 1 மணியளவில், அந்த விமானம் சிங்கப்பூருக்குத் திரும்ப இருந்த நிலையில், தங்கும்விடுதியில் இருந்த மற்ற விமானப் பணியாளர்கள் இரவு 11 மணியளவில், தங்கும்விடுதியின் முகப்பிற்கு வந்துள்ளனர்.
அப்போது வெனிசா மட்டும் வராததால், அவரது அறைக்குச் சென்று பார்த்துள்ளனர். அப்போது அறையில் வெனிசா இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.
சிங்கப்பூர் ஏர்லைன்சில் கடந்த 15 – 20 ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் வெனிசா, இன்னும் திருமணமாகாதவர் என்றும், விரைவில் திருமணம் செய்ய இருந்ததாகவும் சிங்கப்பூர் செய்தி இணையதளம் ஒன்று கூறுகின்றது.
இந்நிலையில், வெனிசாவின் உடலைப் பெற அவரது சகோதரர் தற்போது சான் பிரான்சிஸ்கோ நகருக்கு விரைந்துள்ளார்.