கோலாலம்பூர் – 3-ம் வார்டு நோயாளிகளுக்குப் பல் மருத்துவம் உட்பட இதர மருத்துவக் கட்டணத்தில் எவ்வித மாற்றமோ உயர்வோ இல்லை என சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் இன்று திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.
அந்த அறிக்கையில் டாக்டர் சுப்ரா மேலும் கூறியிருப்பதாவது:-
“சமீபக்காலமாக அரசாங்க மருத்துவமனையில் மருத்துவக் கட்டணம் உயர்வு கண்டுள்ளது என்னும் தவறான கருத்துகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. இத்தகைய தவறான கருத்துகளால் தவறான சிந்தனைகளும் மக்கள் மனதில் போய் சேர்ந்துள்ளது. இதனைச் சரிசெய்யும் அடிப்படையில் இவ்விளக்கத்தைக் கொடுக்க நான் கடமைப்பட்டுள்ளேன்.”
“சுகாதார அமைச்சின் மூலமாக 3-ம் வார்டு நோயாளிகளாகப் பல்வேறு மருத்துவத்துறை சேவைகளை பெற்றுக் கொண்டிருக்கும் மலேசியர்கள், குறிப்பாக குறைந்த வருமானத்தைப் பெற்றுக் கொண்டிருப்பவர்கள் தொடர்ந்து அரசாங்க சுகாதார சேவையைப் பெறுவதற்குரிய கட்டண கொள்கையில் எவ்வித மாற்றங்களும் இல்லை.”
“முதலாம் வார்டிலும் இரண்டாம் வார்டிலும் செல்லக்கூடிய நோயாளிகளுக்கு வகிக்கப்பட்டுள்ள கட்டணத்தில் (Perintah Fi – Perubatan Pindaan 2017) கீழ் சில உயர்வுகள் அமலாக்கத்திற்குக் கொண்டு வரப்படும். பொதுவாக, அரசாங்கத்திற்கு மருத்துவச் சேவை வழங்குவதற்குரிய செலவுகள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. உலகளாவிய அடிப்படையில் மருந்துகள் உட்பட மற்ற சுகாதாரத் தேவைகளுக்கான அடிப்படை தேவைகளின் விலை உயர்வின் அடிப்படையில் இந்நிலை ஏற்பட்டுள்ளது.”
“நிலை இவ்வாறு இருந்தப்போதிலும் 3-ம் வார்டு மருத்துவ சேவையைப் பெறும் குறைந்த வருமானமுடைய மக்களின் சுமையை அதிகரிக்காமல் தொடர்ந்து அரசாங்கம் மூலமாகத் தரமான மருத்துவ சேவை (பல் மருத்துவம் உட்பட) பெறுவதற்கான சூழலை அரசாங்கம் தொடர்ந்து ஏற்படுத்திக் கொடுக்கும்.”
“அதன் படி, பல் சுத்தம் செய்தல் 2 ரிங்கிட்டிற்கும், பல் அடைப்பு 2 ரிங்கிட்டிற்கும், பல் பிடுங்குதல் 1 ரிங்கிட்டிற்கும் சிகிச்சையளிக்கப்படுகின்றது. இந்தக் கட்டண முறையில் எவ்வித மாற்றங்களும் இல்லை. எனவே, மக்களுக்குத் தொடர்ந்து சிறந்த சுகாதார சேவையை வழங்குவதில் அரசாங்கம் தவறுவதில்லை எனவும் தெரிவித்துக் கொள்கிறேன்.” – இவ்வாறு டாக்டர் சுப்ரா தெரிவித்திருக்கிறார்.