கோத்தா பாரு – அம்னோ தகவல் பிரிவுத் தலைவரும் கிளந்தான் மாநிலத்தின் கெத்தெரே நாடாளுமன்ற உறுப்பினருமான டான்ஸ்ரீ அனுவார் மூசா மலேசியக் காற்பந்து சங்கத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதை உறுதி செய்துள்ளார்.
நேற்று தனது முகநூல் பதிவில் காற்பந்து சங்கத் தலைவர் பதவிக்குத் தான் போட்டியிடப் போவதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார். அதே பதிவில் காற்பந்து சங்க அலுவலகத்தில் தனது ஒப்புதல் கடிதத்தை சமர்ப்பிக்கும் புகைப்படத்தையும் அனுவார் மூசா பதிவிட்டுள்ளார்.
அனுவார் மூசா காற்பந்து சங்கத் தலைவருக்குப் போட்டியிடும் ஒப்புதல் கடிதத்தை வழங்குகிறார் (படம்: நன்றி – அனுவார் மூசா முகநூல் பக்கம்)
அனுவார் மூசா மீது ஊழல் தொடர்பான புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து அவர் மாரா நிறுவனத் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
அதைத் தொடர்ந்து அவர் மீதான விசாரணைகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் நடத்தியுள்ளது.
மலேசியக் காற்பந்து சங்கத்தின் முன்னாள் துணைத் தலைவரான அனுவார் மூசாவுக்கு எதிராக போட்டியிடப் போவது யார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
ஜோகூர் சுல்தானின் புதல்வரான துங்கு இஸ்மாயில் துங்கு இப்ராகிம் காற்பந்து சங்கத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவார் எனப் பரவலாக எதிர்பார்க்கப்படுகின்றது. ஜோகூர் சுல்தான் தனது மகன் போட்டியிடுவதற்கு தனது ஒப்புதலை வழங்கியுள்ளார்.
காற்பந்து சங்கத் தலைவருக்கான போட்டிக்கான வேட்புமனுத் தாக்கல் எதிர்வரும் பிப்ரவரி 13-ஆம் தேதியோடு நிறைவடைகிறது. போட்டி இருப்பின் தேர்தல் மார்ச் 25-ஆம் தேதி நடைபெறும்.