சென்னை – இன்று காலை தமிழக முதல்வராக சசிகலா பதவியேற்பார் என்ற தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் அதற்கான வாய்ப்புகள் இல்லை என தமிழக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காரணம், சசிகலாவை முதல்வராக அறிவிப்பதற்கு முன்னால், அதிலுள்ள சட்ட சிக்கல்களை தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் (படம்) சட்ட நிபுணர்களைக் கொண்டு ஆராய்ந்து வருவதால் இதுவரையில் அவர் பதவியேற்புக்கு ஒப்புதல் வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது.
மேலும் அவர் தற்போது சென்னையில் இல்லை என்றும் மும்பையில் இருக்கிறார் என்றும் , அதனால் சசிகலாவின் பதவியேற்பு இன்று செவ்வாய்க்கிழமை திட்டமிட்டபடி நடைபெற வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.
சசிகலா பதவியேற்பதற்கு தடைவிதிக்கக் கூறும் மனு இன்று புதுடில்லியிலுள்ள உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. இன்று காலை அந்த மனு விசாரிக்கப்பட்டு உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதால், அதுவரையில் ஆளுநர் பொறுத்திருப்பார் என்றும் கருதப்படுகிறது.
சசிகலா பதவியேற்க தடையில்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினால், ஆளுநரும் சசிகலாவின் பதவியேற்புக்கு தனது ஒப்புதலை வழங்குவார். பதவியேற்பு இன்று பிற்பகலிலோ, நாளையோ நடைபெறலாம்.
ஆனால், சசிகலா சொத்து குவிப்பு வழக்கு மீதான தீர்ப்பு இன்னும் ஒரு வாரத்தில் உச்ச நீதிமன்றத்தால் வெளியிடப்பட இருப்பதால், தீர்ப்புக்குப் பின்னர் சசிகலா பதவியேற்பது குறித்து முடிவெடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிடலாம் என்ற ஒரு சட்டக் கருத்தும் நிலவுகிறது.
அத்தகைய தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தால் வெளியிடப்படுமானால் ஆளுநர் புதிய முதல்வரை நியமிக்கும் முடிவை ஒத்திப் போடலாம். அதுவரையில் வேறொருவர் இடைக்கால முதல்வராக நியமிக்கப்படலாம். அல்லது ஓ.பன்னீர் செல்வமே தொடர்ந்து இந்த சட்ட சிக்கல்கள் தீரும்வரை தமிழக முதல்வராக நீடிக்கக் கேட்டுக் கொள்ளப்படலாம்.
மர்ம நாவலின் முடிவு என்ன என்பதுபோல் காத்திருக்கின்றனர் தமிழக மக்கள்!
-செல்லியல் தொகுப்பு