சென்னை – சசிகலாவுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியிருக்கும் ஓ.பன்னீர் செல்வம், அதிமுக பொருளாளர் பொறுப்பிலிருந்து சசிகலா தரப்பினரால் நீக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து பன்னீர் செல்வம் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் நீக்கப்படுவார் என சசிகலா அறிவித்துள்ளார்.
தமிழக அரசியலில் நிகழ்ந்து வரும் மாற்றங்களில் சில:-
- இன்று புதன்கிழமை காலை தமிழக இடைக்கால ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்னை வருகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது. பன்னீர் செல்வத்தை அவரது ராஜினாமா கடிதத்தை மீட்டுக் கொள்ளப் போகிறாரா என ஆளுநர் அவரைக் கேட்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு இருக்கிறதா என்பதை நிரூபிக்கும்படி பன்னீர் செல்வத்தை ஆளுநர் கேட்டுக் கொள்ளப்படுவார்.
- தமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது கூட எனக்குத் தெரியாது என்றும், அவர்களை அங்கே, அதிமுக தலைமை அலுவலகத்தில் அமர வைத்து விட்டு அவர்களிடம் கையெழுத்து வாங்கப்பட்டது என்றும் பன்னீர் செல்வம் குற்றம் சாட்டியிருக்கிறார்.
- “அதைத் தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர்களை அதிமுக தலைமையகத்தில் அமர வைத்து விட்டு, என்னை போயஸ் கார்டனுக்கு அழைத்து, சசிகலா என்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தார். அதற்கு இப்போது என்ன அவசரம், நான்தான் முதலிலேயே வேண்டாம் என்று சொன்னேனே, என்று சுமார் இரண்டு மணி நேரம் நான் விவாதம் நடத்தினேன். ஆனால், இறுதியில் என் கரங்களைப் பிடித்துக் கொண்டு, கட்சிக் கட்டுப்பாட்டுக்காக நீங்கள் இதனைச் செய்துதான் ஆக வேண்டும் என்று சசிகலா கேட்டுக் கொண்டார். சரி, நான் அம்மாவின் நினைவிடம் சென்று வணங்கி விட்டு வருகிறேன் என்று கூறியபோதும், என்னை விடவில்லை. பிறகு போய்க் கொள்ளலாம், முதலில் நீங்கள் கையெழுத்து போடுங்கள் எனக் கட்டாயப்படுத்தப்பட்டேன்.” என்று ஓ.பன்னீர் செல்வம் நேற்று ஜெயலலிதா நினைவிடத்தில் தெரிவித்தார்.
- பொருளாளர் பதவி என்பது அம்மா எனக்கு பத்தாண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்டது, அதிலிருந்து என்னை நீக்க யாருக்கும் உரிமை இல்லை என்றும் பன்னீர் செல்வம் பின்னர் தனது இல்லத்தில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தபோது கூறியிருக்கிறார்.
- பன்னீர் செல்வத்துடன் விரைவில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் ஆதரவு தந்து இணைந்து கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
- திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுடன் இணைந்து கொண்டு செயல்படுகிறார் என சசிகலா பன்னீர் செல்வம் மீது குற்றம் சாட்டியிருக்கிறார். ஆனால், திமுகவுடன் எனக்கு எந்த உறவும் இல்லை என்று பன்னீர் செல்வம் பதிலளித்திருக்கிறார்.
- அம்மா மருத்துவமனையில் இருக்கும்போது எந்தத் தலைவரையும் அவரைப் பார்க்க சசிகலா தரப்பு அனுமதிக்கவில்லை என்றும் ஓபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
- அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அவர்களின் மனசாட்சிப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும் ஓபிஎஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.