கோலாலம்பூர் – கனடாவில் பாலியல் வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டு 24 ஆண்டுகள் சிறைத் தண்டனைக்குப் பிறகு மலேசியா திரும்பியுள்ள பினாங்கைச் சேர்ந்த செல்வ குமார், சபா, சரவாக் மாநிலங்களில் நுழைய அம்மாநில அரசுகள் தடை விதித்திருக்கின்றன.
செல்வ குமாரால் தங்கள் மாநிலத்தில் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு பங்கம் வரலாம் என சபா, சரவாக் மாநில அரசுகள் காரணம் கூறியிருக்கின்றன.
இதனிடையே, செல்வ குமார் கிள்ளானில் வசிக்க விரும்புவதாகவும், காவல்துறைத் தன்னைக் கண்காணிப்பதை அவர் ஏற்றுக் கொண்டதாகவும் தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் இன்று புதன்கிழமை கூறினார்.
மலேசிய சட்டப்படி, அவரைக் கண்காணிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றாலும் கூட, செல்வ குமார் காவல்துறைத் தன்னைக் கண்காணிக்க விருப்பம் தெரிவித்ததாக காலிட் குறிப்பிட்டார்.
மேலும், கிள்ளான் மக்கள் செல்வ குமாரை எண்ணி அச்சமடைய வேண்டாம் என்றும், காவல்துறை அவரைத் தொடர்ந்து கண்காணிக்கும் என்றும் காலிட் உறுதியாகக் கூறினார்.