சென்னை – இன்று புதன்கிழமை காலையில் நடைபெற்ற அதிமுக சட்டமன்றக் கூட்டத்தில் 130 சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள வேளையில், அவர்கள் அனைவரும், பேருந்துகளில் அழைத்துச் செல்லப்பட்டு, ஆடம்பர தங்கும் விடுதி ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
யாரும் பன்னீர் செல்வம் பக்கம் தாவி விடக் கூடாது என்ற நோக்கத்தில் அனைத்து சசிகலா ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களும் ஏறத்தாழ சிறைவைக்கப்பட்டுள்ள நிலைமையில் உள்ளனர் என்றும் கூறப்படுகின்றது.
இதன் தொடர்பில் தமிழகத்தின் அண்மைய நிலவரங்கள் வருமாறு:-
- ஓ.பன்னீர் செல்வம் ஒரு துரோகி என்று வர்ணித்துள்ள சசிகலா, அவர் ஜெயலலிதாவை அவமதித்து விட்டார் என்றும் கூறியுள்ளார். அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரச்சனையின் பின்னணியில் திமுக இருக்கிறது என்றும் குற்றம் சாட்டியுள்ளார் சசிகலா.
- பாஜக, திமுக என யாருடைய ஆதரவிலும் நான் இயங்கவில்லை என்றும் சட்டமன்றம் கூடும்போது எனது பலத்தை நிரூபிப்பேன் என்றும் பன்னீர் செல்வம் சூளுரைத்துள்ளார். தனக்கு ஏறத்தாழ 50 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாகவும் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். சட்டமன்றம் கூடும்போது திமுக-காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் பன்னீர் செல்வத்துக்கு தங்களின் ஆதரவை வழங்குவர் என்றும் அதன்மூலம் பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று அவர் முதல்வராகத் தொடர்வார் என்ற ஒரு கருத்தும் நிலவுகின்றது.
- அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டுள்ளது கட்சியின் நடைமுறைகளுக்கு ஏற்ப இல்லை என தேர்தல் ஆணையம் கூறியுள்ளதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- நாளை வெள்ளிக்கிழமை பிப்ரவரி 9-ஆம் தேதி சசிகலா ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும், புதுடில்லி சென்று இந்திய அதிபரைச் சந்திப்பர் – சசிகலாவுக்கான தங்களின் ஆதரவை புலப்படுத்துவர் – என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.