மணிலா – தாங்கள் கேட்கும் 30 மில்லியன் பிசோஸ் (மலேசிய மதிப்பில் 2.6 மில்லியன் ரிங்கிட்) பணத்தைக் கொடுக்கவில்லை என்றால், வரும் பிப்ரவரி 26-ம் தேதி, தாங்கள் பிணை பிடித்து வைத்திருக்கும் 70 வயதான ஜூர்ஜென் காந்தர் என்ற ஜெர்மன் நாட்டவரைக் கொலை செய்துவிடுவோம் என அபு சயாப் இயக்கம் அறிவித்திருக்கிறது.
இது குறித்து இன்று செவ்வாய்க்கிழமை காணொளி ஒன்றை அபு சயாப் இயக்கம் வெளியிட்டிருக்கிறது. அதில் காந்தர் ஜெர்மன் மொழியில் தன்னைக் காப்பாற்றுமாறு கெஞ்சுகிறார்.
மேலும், அதில் பேசும் நபர், தாங்கள் கேட்கும் தொகையைக் கொடுக்கவில்லை என்றால், வரும் பிப்ரவரி 26-ம் தேதி, பிற்பகல் 3 மணியளவில், காந்தரின் தலையை வெட்டிக் கொல்வோம் என்று மிரட்டல் விடுத்திருக்கிறார்.
கடந்த ஆண்டு, தனது மனைவி சபின் மெர்சுடன் பிலிப்பைன்சுக்கு சுற்றுலா வந்திருந்த காந்தர், பிலிப்பைன்சின் ஆபத்தான கடற்பகுதியில் படகு ஒன்றில் சென்று கொண்டிருந்த போது, அபு சயாப் இயக்கத்தினரால் சிறை பிடிக்கப்பட்டார்.
அப்போது காந்தரின் மனைவி தன்னை விடுவிக்க அவர்களை எதிர்த்துப் போராடியதால் சுட்டுக் கொல்லப்பட்டார்.