இஸ்லாமாபாத் -பாகிஸ்தானின் சிந்து மாவட்டத்தில் உள்ள ஒரு சூஃபி மசூதியில் நேற்று வியாழக்கிழமை நடத்தப்பட்ட தற்கொலை வெடிகுண்டுத் தாக்குதலில் இதுவை 100 பேர் மரணமடைந்துள்ளனர்.
அவர்களில் பெண்களும், குழந்தைகளும் அடங்குவர். ஐஎஸ்ஐஎஸ் இந்தத் தாக்குதலை நடத்தியதாக அறிவித்திருக்கிறது.
தாக்குதல் நடத்தப்பட்ட லால் ஷபாஸ் குலாண்டார் மசூதி (கோப்புப் படம்)
மசூதியில் இருந்தவர்கள் பாரம்பரிய நடைமுறைப்படியான ‘தமால்’ (Dhamal) என்ற சூஃபி நடனத்தில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு நுழைந்த தாக்குதல்காரன் வெடிகுண்டுகளை வீசியதோடு, தன்னோடு இணைத்திருந்த வெடிகுண்டுகளையும் வெடிக்கச் செய்தான். அவனும் இந்தத் தாக்குதலில் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
மேலும் 200-க்கும் மேற்பட்டவர்கள் இந்தத் தாக்குதலில் காயமடைந்திருக்கின்றனர்.
சிந்து மாநிலத்திலுள்ள செஹ்வான் ஷரிப் நகரில் உள்ள இந்த சூஃபி மசூதி, 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழ்பெற்ற சூஃபி மகான் லால் ஷபாஸ் குலாண்டார் நினைவிடமான மசூதியாகும்.
வியாழக்கிழமை இதுபோன்ற சூஃபி மசூதிகளில் தொழுகை நடத்துவது புனிதமானதாக கருதப்படுவதால், நேற்று ஏராளமானோர் இந்த மசூதியில் குழுமியிருந்தனர்.
இதுபோன்ற சூஃபி மசூதிகளைக் குறிவைத்து ஐஎஸ்ஐஎஸ் இயக்கம் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றது.
கடந்த 5 நாட்களில் பாகிஸ்தானில் நடத்தப்பட்டிருக்கும் 8-வது தாக்குதல் இதுவாகும்.