சென்னை – (மலேசிய நேரம் 7.30 மணி நிலவரம்) இன்று சனிக்கிழமை தமிழக சட்டமன்ற அவையில் நிகழ்ந்த அமளிகள் ஒருபுறம் திமுகவின் ஜனநாயகப் போராட்டமாகவும், இன்னொரு கோணத்தில் சட்ட நடைமுறைகளுக்கு இடம் கொடுக்காத அதன் வன்முறைக் கலாச்சாரத்தை பிரதிபலித்ததாகவும், அரசியல் பார்வையாளர்களால் பார்க்கப்படுகின்றது.
சட்டை கிழிந்த நிலையில் ஸ்டாலில் சட்டமன்றத்தை விட்டு வெளியே வரும் காட்சி…
இதன் தொடர்பில் மு.க.ஸ்டாலின் முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டிருக்கும் பதிவில், “இன்று ஜனநாயகத்தின் கறுப்பு நாள். தமிழகத்தை ஆளும் மக்கள் விரோத அரசு அகற்றப்படவேண்டும். இதனை வலியுறுத்தி சென்னை மெரினா கடற்கரை காந்தி சிலை அருகே அமைதி வழியில் அறப்போராட்டம் தொடங்குகிறது. ஜனநாயக விரோத அரசை அகற்ற நினைப்போர் அனைவரும் திரளவேண்டுகிறேன்” எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஆனால், காவல் துறையினர் உடனடியாகத் தலையிட்டு மெரினாவில் கூடியவர்களைக் கலைந்து செல்லுமாறு கேட்டுக் கொண்டதோடு, அங்கு மறியலில் ஈடுபட்ட ஸ்டாலின் உட்பட மற்ற திமுக சட்டமன்ற உறுப்பினர்களையும், பிரமுகர்களையும் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து தற்போது ஸ்டாலின் மற்றும் சில திமுக பிரமுகர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அவர்கள் கைது செய்யப்பட்டு ஏற்றப்பட்ட வாகனத்தைத் தடுத்து நிறுத்தி ஆயிரக்கணக்கான திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மெரினா கடற்கரையில் கூடியிருக்கும் திமுக ஆதரவாளர்கள்…
சுமார் ஒன்றரை மணி நேரமாக மெரினா கடற்கரையில் இந்தப் போராட்டம் நீடித்தது.
முன்பாக, ஆளுநர் மாளிகை முன் ஸ்டாலினும், திமுக ஆதரவாளர்களும் திரண்டனர். ஆனால், ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியே வந்த ஆளுநரின் பிரதிநிதி ஸ்டாலின் தரப்பினருடன் பேச்சு வார்த்தை நடத்தி, உங்களின் போராட்டத்தால் இங்கு போக்குவரத்து நெரிசலும், இடைஞ்சலும் ஏற்படுகிறது என்று கூறினார். தொடர்ந்து, உங்களின் எதிர்ப்புக் கருத்துகளை மனுவாகக் கொடுங்கள், நாங்கள் ஆளுநரிடம் சமர்ப்பிக்கிறோம், தற்போதைக்குக் கலைந்து செல்லுங்கள் எனக் கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து ஸ்டாலின் குழுவினர் அங்கிருந்து புறப்பட்டு, மெரினா கடற்கரையை முற்றுகையிட்டனர்.
இருப்பினும், ஸ்டாலின் ஆளுநரை நேரடியாகச் சந்தித்து தனது புகார்களைத் தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. அவரும் ஆளுநரைச் சந்தித்து தனது புகாரைத் தெரிவித்தார்.
தற்போது ஸ்டாலின் கைது செய்யப்பட்டிருப்பது சம்பிரதாய முறைப்படியான ஒன்றுதான் என்றும், இன்னும் சில மணி நேரங்களில் அவர் காவல் துறையால் விடுவிக்கப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
-செல்லியல் தொகுப்பு