கூச்சிங் – சரவாக் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் அட்னான் சாத்திம் காலமானதைத் தொடர்ந்து காலியான அவரது தஞ்சோங் டத்து சட்டமன்றத் தொகுதிக்கு இன்று நடைபெற்ற இடைத் தேர்தலில், அட்னான் சாத்திமின் மனைவி ஜமிலா அனு (படம் – மறைந்த கணவர் அட்னான் சாத்திமுடன்) 6,443 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
61 வயதான ஜமிலா 6,573 வாக்குகள் பெற்றார். கடந்த ஆண்டு மே மாதத்தில் நடைபெற்ற சரவாக் சட்டமன்றத் தேர்தலின்போது, அட்னான் சாத்திம் பெற்ற வாக்குகளை விட இது 551 வாக்குகள் கூடுதலாகும்.
ஜமிலாவை எதிர்த்துப் போட்டியிட்ட சரவாக் ரிபோர்ம் கட்சியின் ஜோனி அபுட் 108 வாக்குகள் பெற்றார். மற்றொரு வேட்பாளரான பார்ட்டி பன்சா டயாக் சரவாக் பாரு கட்சியின் ராப்பல்சன் ரிச்சர்ட் ஹாமிட் 130 வாக்குகளை மட்டுமே பெற்றார். இரண்டு வேட்பாளர்களும் தங்களின் வைப்புத் தொகையை இழந்தனர்.
மேலும் 80 வாக்குகள் செல்லாத வாக்குகளாக அறிவிக்கப்பட்டன.
69.2 சதவீத வாக்குகள் இன்றைய இடைத் தேர்தலில் பதிவாயின. தஞ்சோங் டத்து சட்டமன்றத் தொகுதியில் பதிவு பெற்ற 9,771 வாக்காளர்கள் உள்ளனர்.
முன்னாள் சரவாக் மாநில முதல்வரான அட்னான் சாத்திம் கடந்த ஜனவரி 11-ஆம் தேதி, இருதய செயலிழப்பு காரணமாக காலமானார். அதைத் தொடர்ந்து சட்டமன்ற இடைத் தேர்தல் இன்று சனிக்கிழமை நடைபெற்றது.