ம.இ.கா புத்ரா பிரிவினர் ஏற்பாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையிலான போட்டி விளையாட்டு அறிமுக விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சியடைவதாகக் கூறிய டாக்டர் சுப்ரா “நாட்டின் எதிர்காலச் சந்ததியினரை ஒருங்கே கண்டது மனத்திற்கு நிறைவைக் கொடுத்தது. எதிர்காலச் சந்ததியினர்களான மாணவர்கள் சிறப்பாகவும் நலமாகவும் இருந்தால் நாடு நன்றாக இருக்கும்; சமுதாயம் நன்றாக இருக்கும்; மக்களும் நன்றாக இருப்பர். அவ்வகையில், பல்கலைக்கழகத்தில் பயிலக்கூடிய மாணவர்கள் வருங்காலத்தில் பல்வேறு துறைகளின் தலைமைப் பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளக்கூடியவர்களாக இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆக, அவர்களோடு ஆரோக்கியமான உறவை ஏற்படுத்திக் கொள்வது அரசாங்கத்திற்கும், அரசியலைச் சார்ந்தவர்களுக்கும் மிக முக்கியமாகும்” என்றும் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மஇகா தேசியத் துணைத் தலைவர் எஸ்.கே.தேவமணி, உதவித் தலைவர் டி.மோகன், புத்ரா பிரிவுத் தலைவர் யுவராஜா, ஜோகூர் மாநில சட்டமன்ற உறுப்பினர் அசோஜன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
“அதன் அடிப்படையில், ம.இ.கா புத்ரா பிரிவினர் வழியாக கடந்த ஓராண்டுகளாகப் பல்வேறு திட்டங்களையும் அணுகுமுறைகளையும் வகுத்து பல்கலைக்கழக மாணவர்களிடையே நெருக்கமான உறவை வலுப்படுத்திக் கொள்வதற்காகச் செயலாற்றி வருகின்றனர். அந்த உறவின் அடிப்படையில், மாணவர்கள் அரசியல் தலைவகளையும்; அரசியல் தலைவர்கள் மாணவர்களையும் புரிந்து கொண்டு எதிர்காலத்தை நாம் அனைவரும் ஒன்றாக சேர்ந்து நிருணயிக்கக்கூடிய ஒரு சூழ்நிலையை உருவாக்க வேண்டுமென்பதே இத்திட்டங்களின் தலையாய நோக்கமாகும்” என்றும் சுப்ரா தனது உரையில் மேலும் கூறினார்.
அதன் தொடர்கட்ட முயற்சியாக, விளையாட்டுத் துறை மூலமாக உயர்கல்வி மாணவர்களுடன் அணுக்கமான உறவை மேம்படுத்திக் கொள்ள நாட்டில் இருக்கக்கூடிய ஏறக்குறைய 26 அரசாங்கம், தனியார் பல்கலைகழகங்களுக்கிடையில் போட்டி விளையாட்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறும் இப்போட்டி விழாவில், ஆண்களுக்குக் காற்பந்தாட்டமும் பெண்களுக்குப் பூப்பந்து போட்டியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஏறக்குறைய 26 உயர்கல்விக் கூடங்களிலிருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்றாக இணைந்து அவர்களுக்கிடையிலான உறவை வலுப்படுத்திக் கொள்வதற்கும், அதேநேரத்தில் அரசியல் தலைவர்களுடனும் அணுக்கமான உறவை மேம்படுத்திக் கொள்ளும் வாய்ப்பையும் இதன் மூலம் நாங்கள் ஏற்படுத்தியுள்ளோம்” என நிகழ்ச்சியில் திரளாகத் திரண்டிருந்த மாணவர்களிடையே சுப்ரா தெரிவித்தார்.
இந்த உறவின் அடிப்படையில் உயர்கல்விக்கூட மாணவர்களுக்கு ஆரோக்கியமான சிந்தனைகளை ஊட்டி எதிர்காலத்தில் சிறந்த தலைமைத்துவத்தை வெளிக்கொணர்வதற்கும் அரசாங்கத்திற்குச் சிறந்த அஸ்திவாரமாக இருப்பதற்கும் வாய்ப்புகள் அமையும் என மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் சுப்ரா கூறினார்.