கோலாலம்பூர் – மலேசிய விமான நிலையத்தில் இரு பெண்களால் விஷம் பாய்ச்சிக் கொலை செய்யப்பட்ட வடகொரிய அதிபரின் சகோதரர் கிம் ஜோங் நம்மின் உடலில் நடத்தப்பட்ட ஆய்வில், அவருக்கு மாரடைப்போ அல்லது உடம்பில் துளையிடப்பட்ட காயங்களோ இல்லை என்பது உறுதியாகியிருக்கிறது.
இதனை மலேசிய சுகாதாரத்துறை இயக்குநர் டத்தோ டாக்டர் நூர் ஹிசாம் அப்துல்லா இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில், உறுதிப்படுத்தினார்.
எனினும், இறந்த நபரின் அடையாளத்தையும், இறப்பிற்கான காரணத்தையும் அறிய பரிசோதனை முடிவுகளுக்காகக் காத்திருப்பதாகவும் நூர் ஹிசாம் குறிப்பிட்டார்.
இறந்தவர், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் ஒன்று விட்ட சகோதரர் கிம் ஜோங் நம் தான் என வடகொரிய காவல்துறையும், ஊடகங்களும் தான் இதுவரை கூறியிருக்கின்றன என்று குறிப்பிடும் நூர் ஹிசாம், மலேசியா அதனை இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என்று தெரிவித்தார்.
மேலும், இதுவரை கிம் ஜோங் நம்மின் உடலைப் பெற அவரது உறவினர்கள் யாரும் வரவில்லை என்றும் நூர் ஹிசாம் தெரிவித்தார்.
கடந்த பிப்ரவரி 15-ம் தேதி முதல் பிரேதப் பரிசோதனையும், தற்போது இரண்டாவது பிரேதப் பரிசோதனையும் நடத்தப்பட்டிருப்பதாகவும் டாக்டர் நூர் தெரிவித்தார்.