சென்னை – சசிகலா, அதிமுக தரப்புகளுக்கு எதிராக ஓர் அரசியல் சக்தியாக ஓ.பன்னீர் செல்வம் தலையெடுப்பதைத் தவிர்க்கும் பொருட்டும், திமுக மற்றும் அதன் செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை முன்னிலைப் படுத்தும் நோக்கிலும் எடப்பாடி பழனிசாமியின் அதிமுக அரசுக்கு எதிரான பல்முனைப் போராட்டங்களை திமுக நடத்தி வருகின்றது.
அதன் முதல் கட்டமாக எடப்பாடி பழனிசாமி அரசு வெற்றி பெற்ற நம்பிக்கையில்லாத் தீர்மானம் செல்லாது என திமுக தொடுத்துள்ள வழக்கு நாளை புதன்கிழமை சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
இந்த வழக்கு குறித்த பல்வேறு மாறுபட்ட கருத்துகள் சட்ட நிபுணர்களால் தெரிவிக்கப்படுகின்றன. சட்டசபை விவகாரங்களை நீதிமன்றம் விசாரிக்க வாய்ப்பில்லை என ஒரு தரப்பும், நீதிமன்றம் தலையிடலாம் என இன்னொரு தரப்பும், சட்டசபையில் மிக மோசமான முறையில் நடந்து கொண்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் நடத்தையினால், வழக்கை சாதகமாக நீதிமன்றம் அணுக வாய்ப்பில்லை என வேறு சிலரும் வாதிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நீதிமன்றத்தின் முடிவை அறிந்து கொள்ள தமிழ்நாடு பரபரப்புடன் தயாராகி வருகின்றது.
அதே வேளையில், நாளை புதன்கிழமை மாநிலம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டத்தையும் திமுக அறிவித்துள்ளது.
தமிழக சட்டமன்ற அமளியை விவரிக்க, இந்திய அதிபரையும் சந்திக்க ஸ்டாலின் முயற்சிகள் எடுத்துள்ளார். எதிர்வரும் பிப்ரவரி 23-ஆம் தேதி ஸ்டாலினைச் சந்திக்க இந்திய அதிபர் நேரம் ஒதுக்கியுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னொரு போராட்டமாக, தமிழக சட்டமன்ற அவைத் தலைவர் தனபாலுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தையும் திமுக முன்மொழிந்துள்ளது.
-செல்லியல் தொகுப்பு