கோலாலம்பூர் – கிம் ஜோங் நம் இறந்ததற்கான காரணம் என்னவென்று அடுத்த வாரம் தெரிந்துவிடும் என சுகாதாரத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் இன்று வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
எனினும், அது கிம் ஜோங் நம் தான் என்பதை உறுதிப்படுத்த அவரது குடும்ப உறுப்பினர்களின் மரபணு அல்லது அதிகாரப்பூர்வமாகப் பெறப்பட்ட அந்நபரின் முந்தைய தரவுகள் ஏதேனும் வேண்டும் என்றும் டாக்டர் சுப்ரா கூறினார்.
வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் சகோதரரான கிம் ஜோங் நம், கடந்த பிப்ரவரி 13-ம் தேதி, கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில், இரு பெண்களால் விஷம் பாய்ச்சிக் கொலை செய்யப்பட்டதாக நம்பப்படுகின்றது.
இந்நிலையில், கிம் ஜோங் நம் சடலத்தில் நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனை முடிவுகள் அடுத்தவாரம் வெளிவரவிருப்பது குறிப்பிடத்தக்கது.