Home Featured தொழில் நுட்பம் “தொழில்நுட்பத்தில் தமிழ்” – யாழ்ப்பாணத்தில் முத்து நெடுமாறன் உரையாற்றுகிறார்!

“தொழில்நுட்பத்தில் தமிழ்” – யாழ்ப்பாணத்தில் முத்து நெடுமாறன் உரையாற்றுகிறார்!

1529
0
SHARE
Ad

muthu nedumaran

யாழ்ப்பாணம் – இலங்கைத் தலைநகர் கொழும்புவில், எழுத்துரு தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு நடைபெறும் அனைத்துலக மாநாட்டில் (International Typography Day conference) கலந்து கொள்ள இலங்கை வந்துள்ள முத்து நெடுமாறன் யாழ் நகரில் நடைபெறும் “தொழில்நுட்பத்தில் தமிழ்” என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றவிருக்கின்றார்.

யாழ் நகர் பொது நுாலக கேட்போர் கூடத்தில் எதிர்வரும் திங்கட்கிழமை பிப்ரவரி 27-ஆம் நாள் மாலை 2 மணி தொடக்கம் 5 மணிவரை இந்த நிகழ்ச்சி நடைபெறும்.

#TamilSchoolmychoice

முத்து நெடுமாறன் செல்லினம் குறுஞ்செயலி மற்றும் முரசு அஞ்சல் மென்பொருள் ஆகியவற்றின் வடிவமைப்பாளரும், உருவாக்குநரும் ஆவார். செல்லியல் ஊடக குறுஞ்செயலியின் இணை தோற்றுநரும், தொழில் நுட்ப வடிவமைப்பாளருமான முத்து நெடுமாறன், வடக்கு தகவல் தொழில்நுட்ப சம்மேளனத்தின் (NCIT) அழைப்பின் பேரில் முதன்முதலாக யாழ்ப்பாணம் வருகின்றார் .

“தகவல் தொழில்நுட்ப சாதனங்களில் தமிழ்” என்பது தொடர்பிலும் “தொழில் நுட்பத்தில் தமிழ் சார்ந்த தொழில் முயற்சியான்மை அனுபவங்கள்” என்ற தலைப்பிலும் அவர் தனது கருத்துகளைப் பகிர்ந்து கொள்வதோடு, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களின் கேள்விகளுக்கும் விடைதர உள்ளார்.

கொழும்புவிலும் முத்து நெடுமாறன் உரை

யாழ் நிகழ்ச்சிக்கு ஒரு நாள் முன்பாக, ஞாயிற்றுக்கிழமை பிப்ரவரி 26-ஆம் நாள் கொழும்புவில் நடைபெறும் மற்றொரு நிகழ்ச்சியிலும் முத்து நெடுமாறன் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.

உத்தமம் எனப்படும் உலகத் தமிழ்த் தகவல் தொழில் நுட்ப மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் ‘மின்னுட்பக் கருவிகளில் தமிழ்ப் பயன்பாடு’ என்ற தலைப்பிலான பயிலரங்கில் கலந்து கொண்டு தனது கருத்துகளையும், சில செயல்முறை விளக்கங்களையும் முத்து நெடுமாறன் வழங்குவார்.

முத்து நெடுமாறன் உத்தமம் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டதில் முக்கிய பங்காற்றியவர் என்பதோடு, அந்த அமைப்பு தோற்றுவிக்கப்பட்டபோது முதலாவது உதவித் தலைவராகப் பணியாற்றியவராவார்.

உத்தமம் அமைப்பின் தமிழ் தகவல் தொழில்நுட்பம் மீதான அனைத்துலக மாநாட்டின் தலைவராகவும் முத்து நெடுமாறன் பணியாற்றியிருக்கின்றார்.

கொழும்புவில் உள்ள பெண்கள் கல்வி ஆய்வு நிலைய கருத்தரங்கு மண்டபம், வெள்ளவத்தை, தர்மராம மாவத்தை, என்ற இடத்தில் நடைபெறும் இந்தப் பயிலரங்கத்திற்கு இலங்கை உத்தமம் கிளையின் உறுப்பினர் இ.பாரதி தலைமை வகிப்பார்.