தாத்தா சங்கிலி முருகன் கவுன்சிலராக ஆசைப்பட்டு கடைசி வரை ஆகவே முடியாமல் காலம் கடந்துவிட, அவரது மகனான அறிவுடை நம்பி (விஜய் ஆண்டனி) எம்எல்ஏ பதவியை எட்டும் நிலையில், எதிரிகளின் சூழ்ச்சியால் பலியாகிவிட, அவரது மகன் தமிழரசன் (இன்னொரு விஜய் ஆண்டனி) இந்த அரசியல் விளையாட்டை எப்படி விளையாடி பதவியைப் பிடிக்கிறார் என்பதை விறுவிறுப்பான திரைக்கதை அமைப்பின் மூலமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் ஜீவா சங்கர்.
திரைக்கதை
படத்தின் மிகப் பெரிய பலமாகத் தெரிவது தனது பாதையில் இருந்து சற்றும் விலகாத திரைக்கதை அமைப்பு.
இது ஒரு அரசியல் படம். அரசியலில் இருக்கும் சூழ்ச்சிகள், நம்பிக்கை துரோகங்கள், போட்டி பொறாமைகள் இவற்றை அடிப்படையாகக் கொண்டு, அதற்கு ஏற்ப காட்சிகள், வசனங்கள் அமைத்து, கதையை அதன் இயல்பிலேயே நகர்த்தியிருக்கிறார் இயக்குநர்.
இத்தனைக்கும், படத்தில் விஜய் ஆண்டனிக்கும், மியா ஜார்ஜுக்கும் இடையில் காதல், கல்யாணம் போன்ற விசயங்கள் இருந்தும் கூட, அது எதுவுமே ரசிகர்களின் மனநிலையை திசை மாற்றிவிடக் கூடாது என்பதில் இயக்குநர் மிகவும் மெனக்கெட்டிருப்பது நன்கு தெரிகிறது.
தேவையில்லாத திணிப்பாகத் தெரிவது பாடல்கள் தான். பாடல்கள் அவசியம் வைக்க வேண்டும் என்று நினைத்தால், அதற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து, கேட்டு ரசிக்கும் படியோ அல்லது பார்த்து ரசிக்கும் படியோ எடுத்திருக்கலாம். ஆனால் அது எதுவுமே இல்லாமல் படத்தில் இடம்பெற்றுள்ள உப்புசப்பில்லாத பாடல்கள் தேவையில்லை என்றே தோன்றுகிறது.
நடிப்பு
விஜய் ஆண்டனி… ஜீவாசங்கர் ‘நான்’ படத்தில் அறிமுகப்படுத்திய போது இருந்த நடிப்பிற்கும், இப்போது ‘எமன்’ திரைப்படத்தில் நடித்திருப்பதற்கும் நடிப்பில் நல்ல முதிர்ச்சியைக் காண முடிகின்றது.
மியா ஜார்ஜ்.. நடிகை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். காதல் காட்சிகளில் நடனமாடுகிறார். அவர் நடிப்பதற்கு சில காட்சிகளே இருக்கின்றன. அதனை சரியாகவே செய்திருக்கிறார். மற்றபடி பெரிதாக ஈர்க்கவில்லை.
படத்தில் மொத்தம் நான்கு முக்கியக் கதாப்பாத்திரங்கள் அரசியல் விளையாட்டை மிகத் தந்திரமாக விளையாடுகின்றன. அதில் நடித்திருப்பவர்கள் இயக்குநர் தியாகராஜன், நடிகர் அருள் ஜோதி, ஜி. மாரிமுத்து, சார்லி.
உதாரணமாக, “இங்க யாரும் இன்னோசெண்ட் இல்ல தமிழ்”, “எல்லாரும் ஏதோ ஒரு ஆதாயத்திற்காகத் தான் உதவி செய்றோம்”, “உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் தமிழ்.. ஆனா பிசினஸ்ல நீ பண்ணது தான் பிடிக்கல”.
அமைச்சராக தங்கப்பாண்டியன் கதாப்பாத்திரத்தில் நடிகர் அருள் ஜோதி நடித்திருக்கிறார். அருள் ஜோதி என்று சொன்னால் சட்டென எல்லோருக்கும் தெரிந்துவிடாது. குறும்படங்களில் ஆரம்பித்து தற்போது வெள்ளித்திரையில் தனது நடிப்பால் அனைவரையும் கவர்ந்து வரும் ஒரு நடிகர். எமன் திரைப்படத்தில் அவரது நடிப்பு மிகவும் ரசிக்க வைத்திருக்கிறது. குறிப்பாக அவரது வித்தியாசமான தோற்றம் கவர்கிறது.
ஜி.மாரிமுத்து.. அரசியல் படங்களில் தவறாமல் இவர் இருப்பார் என்று சொல்லும் அளவிற்கு தத்ரூபமாக நடிக்கக் கூடிய நடிகர். இப்படத்திலும் சில காட்சிகளே வந்தாலும் சிறப்பாக நடித்திருக்கிறார்.
நடிகர் சார்லி.. கிருமி படத்திற்குப் பிறகு அவருக்குக் கிடைத்திருக்கும் சிறப்பான கதாப்பாத்திரம். படத்தில் இவரது இருப்பு பக்கபலம் சேர்த்துள்ளது. அமைச்சருக்கு தனிச்செயலாளராக இருப்பவர்களின் நிலை எப்படியிருக்கும் என்பதை சார்லியின் நடிப்பின் மூலமாக உணர முடிகின்றது.
ஒளிப்பதிவு, இசை
ஜீவா சங்கரே ஒளிப்பதிவும் செய்திருக்கிறார். பிளாஷ்பேக் காட்சிகளுக்கு ஒரு வண்ணமும், நடப்பு காட்சிகளுக்கு ஒரு வண்ணமுமாக வித்தியாசம் காட்டியிருக்கிறார். அமைச்சர்களின் வீடுகள், அலுவலகங்கள், தொகுதிகள், பார்கள் என கதை நகரும் அரசியல் சூழலுக்கு ஏற்றவாறு காட்சிகள் அமைந்திருக்கின்றன.
அதற்கு ஏற்ப விஜய் ஆண்டனியின் பின்னணி இசை கைகொடுத்திருக்கிறது. பாடல்களில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.
மொத்தத்தில், எமன் – விறுவிறுப்பான அரசியல் பகடை விளையாட்டு.. நிகழ்கால சூழலுக்கு ஏற்ற படம்!
-ஃபீனிக்ஸ்தாசன்