கோயம்புத்தூர் – தமிழக முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமியும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் இன்று வெள்ளிக்கிழமை தங்களுக்கிடையிலான முதல் சந்திப்பை நடத்துகிறார்கள்.
கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் அமைக்கப்பட்டுள்ள 112 அடி உயர ஆதியோகி சிவனின் மார்பளவு சிலை மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு இன்று மாலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது. சிலையை பிரதமர் மோடி இன்று மாலை திறந்து வைக்கிறார்.
இதற்காக தனி விமானம் மூலம் கோவை பீளமேடு விமான நிலையத்தில் இன்று மாலை வந்தடையும் பிரதமர் மோடியை, ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் வரவேற்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சியின் வழி பழனிசாமிக்கும், மோடிக்கும் இடையில் முதல் சந்திப்பு நடைபெறுகின்றது. கோவை விமான நிலையத்தில் இருந்து ஒரே ஹெலிகாப்டரில் மோடியும், பழனிசாமியும் ஈஷா யோகா மையம் செல்கிறார்கள்.
இதே விழாவில் புதுச்சேரி மாநில ஆளுநர் கிரண்பேடி, மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான், மத்திய அமைச்சர்கள் என பல பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.
மோடிக்கு எதிராக கறுப்புக் கொடி காட்டப்படும் என சில அமைப்புகள் அறிவித்திருப்பதால், அவருக்கு கடுமையான 5 அடுக்கு பாதுகாப்புகளை காவல் துறையினர் ஏற்படுத்தியிருக்கின்றனர்.