கோலாலம்பூர் – கடந்த பிப்ரவரி 13-ம் தேதி, கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் இரு பெண்களால் விஷம் தேய்த்துக் கொலை செய்யப்பட்ட வடகொரிய அதிபரின் ஒன்று விட்ட சகோதரர் கிம் ஜோங் நம் கொலை விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளி வந்து கொண்டிருக்கின்றன.
இது குறித்து காவல்துறை, நிபுணர்கள் தரப்பிலிருந்து வெளிவந்திருக்கும் அண்மையத் தகவல்கள் இதோ:-
1.கிம் ஜோங் நம்மைக் கொலை செய்யப் பயன்படுத்தப்பட்டிருக்கும் நச்சு விஎக்ஸ் நெர்வ் ஏஜெண்ட் (VX Nerve Agent) என அழைக்கப்படுகின்றது. மிகக் கொடிய நச்சுத் தன்மை கொண்ட இரசாயனமான இது சில நொடிகளில் மனித உடலில் உள்ள நரம்பு மண்டலங்களின் செயல்பாடுகளைத் தடை செய்து மிகக் கடுமையான வலியுடன் மனிதனை சாகடித்துவிடக் கூடிய தன்மை வாய்ந்ததாக வேதியியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
2.“இந்த இரசாயனம் 1980 ஈரான் – ஈராக் போரின் போது பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அது ஏற்படுத்திய பாதிப்புகள் குறித்து நான் ஆய்வு செய்திருக்கிறேன். கிம் ஜோங் நம் மிகக் கடுமையான வலியை அனுபவித்தே இறந்திருக்கிறார்” என்கிறார் மலேசியா அறிவியல் பல்கலைக்கழகத்தின் முன்னாள் நச்சியல் ஆய்வாளர் டாக்டர் சுல்கிப்ளி அகமட்.
3.இந்தக் கொடிய விஷத்தைப் பயன்படுத்தி ஜோங் நம்மைக் கொலை செய்த இரு பெண்களில் ஒருவருக்கு அதன் பாதிப்பு ஏற்பட்டு, சிறையில் அவர் உடல்நலக் குறைவாக இருப்பதாகவும், தினமும் வாந்தி எடுத்துக் கொண்டிருப்பதாகவும் தேசியக் காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் தெரிவித்திருக்கிறார்.
4.கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் 2-ல் கொலை நடந்த இடம் மற்றும் கொலையாளிகள் கை கழுவச் சென்றதாக நம்பப்படும் கழிவறைகள் ஆகியவற்றில் இக்கொடிய விஷத்தின் தடையங்கள் இருக்கலாம் என்பதால், நிபுணர்களின் உதவியோடு அதனை அகற்றும் நடவடிக்கையை காவல்துறை மேற்கொண்டு வருகின்றது.
5.இதனிடையே, கோலாலம்பூரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் இருந்து காவல்துறை, அபாயகரமான வேதிப் பொருட்களையும் கைப்பற்றியிருக்கிறது. ஜோங் நம் கொலையில் தொடர்புடையதாக நம்பப்படும் மேலும் சிலரையும் காவல்துறை வலைவீசித் தேடி வருகின்றது.
6.அபாயகரமான இரசாயன ஆயுதங்கள் தயாரிப்பதில் நீண்ட நாட்களாக ஈடுபட்டு வரும் வடகொரியா 5,000 டன்கள் இரசாயன ஆயுதங்கள் வைத்திருப்பதாக தென்கொரிய நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த இரசாயன ஆயுதங்களில் கிம் ஜோங் நம்மைக் கொலை செய்யப் பயன்படுத்தப்பட்ட ஆயுதமும் ஒன்று என்றும் கூறுகின்றனர்.