Home Featured நாடு கின்ராரா தமிழ்ப்பள்ளியின் இணைக் கட்டிடத்திற்கு விரைவில் தீர்வு! டி.மோகன் நம்பிக்கை!

கின்ராரா தமிழ்ப்பள்ளியின் இணைக் கட்டிடத்திற்கு விரைவில் தீர்வு! டி.மோகன் நம்பிக்கை!

1107
0
SHARE
Ad

mohan-visit-kinrara-4

பூச்சோங் – இங்கு அமைந்துள்ள தேசிய மாதிரி கின்ராரா தமிழ்ப்பள்ளியின் இணைக் கட்டிடத்திற்கு அடித்தளம் போடப்பட்டுள்ள நிலையில் ஒரு சில காரணங்களினால் அதன் கட்டுமானப் பணிகள் தாமதமாகியிருக்கும் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு பிறக்கும் என இந்தப் பள்ளியைப் பார்வையிட்ட மஇகாவின் தேசிய உதவித்தலைவர்  டத்தோ டி.மோகன் நம்பிக்கை தெரிவித்தார்.

பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்தப் பிரச்சனை குறித்து நேற்று வெள்ளிக்கிழமை பிப்ரவரி 24-ஆம் தேதி நடத்தப்பட்ட அவசரக் கூட்டத்தில் கலந்து கொண்ட மோகன் பிரச்சனைக்கான காரணங்களை ஆய்வு செய்ததோடு,  இந்த இணைக் கட்டிடத்தை கட்டும் கட்டுமான நிறுவனத்தோடு பேச்சுவார்த்தையும் நடத்தியுள்ளார்.

#TamilSchoolmychoice

mohan-kinrara school-visitகின்ராரா தமிழ்ப் பள்ளி நிர்வாகத்தினருடன் பள்ளி வளாகத்தை டி.மோகன் சுற்றிப் பார்த்தபோது…

அதனைத் தொடர்ந்து இந்தப் பிரச்னைக்கான காரணங்கள் குறித்து பத்திரிக்கையாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த டி.மோகன் “பள்ளி நிர்வாகமோ, பெற்றோர் ஆசிரியர் சங்கமோ, கட்டுமான நிறுவனமோ இந்த விவகாரத்தில் தவறிழைக்கவில்லை. சரியான நேரத்தில் பணம்  வராத காரணமும், அனுமதி கிடைக்க கால தாமதம் ஆனதாலும் 2012 ஆம் ஆண்டு  2 மில்லியனில் கட்டி முடிக்க வேண்டிய இந்தக் கட்டிடத்திற்கு இன்றைய காலக் கட்டத்தில் 2.8 மில்லியன் செலவாகிறது” எனக் கூறினார்.

mohan-kinrara visit- 3கின்ராரா பள்ளியின் இணைக் கட்டிடம் அமையவிருக்கும் இடத்தை ஆராயும் டி.மோகன்….

கெந்திங் கம்யூனிட்டி செஸ்ட்  இந்தக் கட்டிடத்தை கட்டிக் கொடுக்க  2 மில்லியன் ரிங்கிட் நன்கொடை அறிவித்த  நிலையில்  இப்பொழுது எஞ்சியுள்ள பணத்தை திரட்டிய பின் 2 மில்லியன் தருவதாக சொல்லியுள்ளார்கள். அத்தகைய சூழலினாலே இந்தப்பிரச்சனை இந்த அளவிற்கு தீவிரமடைந்துள்ளது. மீதமுள்ள 8 லட்சம் வெள்ளியை பள்ளி நிர்வாகம் எவ்வாறு வசூல் செய்ய முடியும் எனவும் மோகன் கேள்வி எழுப்பினார்.

“பிரதமரின் வாக்குறுதிப்படி 2012-ம் ஆண்டு 3.5 மில்லியன் நிதி ஒதுக்கீடு அறிவித்தார். அப்படிப்பட்ட நிலையில் அரசாங்கம் இந்தப்பிரச்சனையை செவிமெடுத்து 2.8 மில்லியன் செலவில் இந்த இணைக்கட்டிடத்தை கட்டி முடிக்க வழிவகை செய்ய வேண்டும். ஒரு வேளை பிரதமரின் பார்வைக்கு இந்தப் பிரச்சனை குறித்து கொண்டு செல்லப்படாமலும் இருந்திருக்கலாம். அந்த ஒரு காரணமும் இந்தப்பிரச்சனைக்கு வழிவகுத்துவிட்டது.

mohan-kinrara -visit-2

பள்ளி நிர்வாகத்துடன் கலந்தாலோசனை நடத்தும் டி.மோகன்…

இணைக் கட்டிட தாமதத்தினால் நமது பிள்ளைகளும், பெற்றோர்களும் பிரச்சனைகளை எதிர்நோக்குகிறார்கள்” என்றும் கூறிய மோகன், எனவே, இந்த விவகாரம் தொடர்பில் மஇகாவின் தலைவரும், சுகாதார அமைச்சருமான  டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம், கல்வி துணையமைச்சர் டத்தோ ப.கமலநாதன் ஆகியோரைச் சந்தித்து, கலந்து பேசி  இந்தப் பிரச்சனைக்கு நல்லதொரு தீர்வினை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டு வரைவுக் குழுத்தலைவர் பேராசிரியர் டத்தோ டாக்டர்  என்.எஸ்.ராஜேந்திரன் விரைவில் இந்தப்பள்ளிக்கு வருகை தந்து  சம்பந்தப்பட்டவர்களோடு  இந்தப்பிரச்சனை குறித்து ஆய்வு செய்யவிருப்பதாகவும் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.