Home Featured தமிழ் நாடு ஸ்டாலின் – ஓபிஎஸ் மோதல்!

ஸ்டாலின் – ஓபிஎஸ் மோதல்!

769
0
SHARE
Ad

panneer-selvam-Stalinசென்னை – தமிழக அரசியல் காட்சிகள் நாளுக்கு நாள் மாறி வருகின்றன. பன்னீர் செல்வமும், தீபாவும் இணைந்து செயல்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில், எம்ஜிஆர்-அம்மா-தீபா பேரவை என்ற பெயரில் புதிய அரசியல் இயக்கம் ஒன்றைக் கண்டு தனி ஆவர்த்தனர் வாசிக்கத் தொடங்கி விட்டார் தீபா.

இன்னொரு கோணத்தில் சட்டமன்றத்தில் இணைந்து நின்று அதிமுக அரசை நம்பிக்கையில்லாத் தீர்மானம் மூலம் பன்னீர் செல்வமும், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும் தோற்கடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில், பன்னீர் செல்வத்தின் காலை வாரிவிட்டு, தனியாக சட்டமன்றத்தில் களேபரம் செய்து, பன்னீர் செல்வத்தை ஓரங்கட்டி விட்டார் ஸ்டாலின்.

பன்னீர் செல்வம் தனி அரசியல் சக்தியாக, அதிமுகவுக்கு மாற்றாக உருவெடுப்பதை ஸ்டாலினும் திமுகவினரும் விரும்பவில்லை என்பதையே இது காட்டியது.

#TamilSchoolmychoice

இந்நிலையில், தற்போது ஓபிஎஸ்-சுக்கும் ஸ்டாலினுக்கும் இடையில் மோதல் வெடித்துள்ளது.

குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரையும், படத்தையும் அரசு சம்பந்தப்பட்ட அம்சங்களிலிருந்து நீக்க வேண்டும் என தற்போது போர்க்கொடி தூக்கியுள்ள ஸ்டாலினைக் கண்டித்து ஓபிஎஸ் அறிக்கை விடுத்திருந்தார்.

அதற்கு பதிலளிக்கும் விதத்தில் ஓ.பன்னீர் செல்வத்தை சாடி ஸ்டாலின் விடுத்திருக்கும் அறிக்கை பின்வருமாறு:

stalin“அரசு குற்றவாளி என்ற தீர்ப்பு உறுதி செய்யப்பட்டு, மரணமடைந்த காரணத்தினால் தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு, அபராதத் தொகையான 100 கோடி ரூபாயைக் கட்டியாக வேண்டும் என்பதுதான் மறைந்த முதலமைச்சர் அம்மையார் ஜெயலலிதா அவர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மீதான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு.

இந்தியாவின் நீதித்தலைமை அளித்துள்ள இந்தத்தீர்ப்பு நாடு முழுவதும் ஊழல் குற்றவாளிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் அளவில் அமைந்திருப்பதுடன், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ள, ஊழலற்ற நிர்வாகத்தை எதிர்பார்க்கின்ற இளைய தலைமுறையினரின் வரவேற்பையும் பெற்றுள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான், அம்மையார் ஜெயலலிதாவின் படங்களை அரசு அலுவலகங்களில் பயன்படுத்தக்கூடாது என்றும், அரசு சார்பில் அவர் படத்தையும், பெயரையும் பயன்படுத்தி விளம்பரங்கள் அளிக்கக்கூடாது என்றும், அவர் பெயரில் அமைந்துள்ள அரசு திட்டங்களுக்குப் பெயர் மாற்றம் செய்யவேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் வலியுறுத்தி தலைமைச் செயலாளர் அவர்களிடம் கோரிக்கையையும் அளித்துள்ளேன்.

பன்னீர் செல்வத்துக்கு கண்டனம்

இதற்காக என் மீது விமர்சனக் கணை தொடுத்திருக்கிறார் முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் அவர்கள். அவருக்கு நான் நினைவூட்ட விரும்புவது என்னவென்றால், முதல்வராக அவர் பதவியிலிருந்த போது, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சட்டமன்றத்தில் இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது, அரசியல் கருத்து வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு அம்மையார் ஜெயலலிதாவின் இயல்பைப் பாராட்டிப் பேசியவன்தான் நான் என்பதை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். அரசியல் ரீதியாக எதிரெதிர் துருவங்களாக இருப்பவர்களாயினும் அவர்களின் தனிப்பட்ட பண்புநலன்களைப் பாராட்டுவது என்பது எங்கள் தலைவர் கலைஞர் எங்களுக்கு கற்றுத் தந்திருக்கும் முதிர்ச்சியான அரசியல் பண்பாடு. ஒருவருக்கொருவர் பார்த்து சிரித்துக்கொள்வதே பெருங்குற்றம் என்கிற அரசியல் தீண்டாமையை கடைப்பிடிக்கிற இயக்கம் தி.மு.க அல்ல.

O-Panneerselvamஅ.தி.மு.க என்ற கட்சியின் சார்பில் அம்மையார் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவைக் கொண்டாடுவதோ, அவருடைய படங்களைப் பயன்படுத்துவதோ அவர்களின் உரிமையைச் சார்ந்தது. அதுகுறித்து நாங்கள் கேள்வி எழுப்பவோ, விமர்சிக்கவோ இல்லை. ஆனால், ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி, அரசு பணத்தில் ஊழல் செய்து, அதன் மூலம் குவித்த சொத்துகளைப் பாதுகாப்பதற்காகவே தன் இல்லத்தில் ஒரு குடும்பத்தைத் தங்க வைத்திருந்தார் என்று உச்சநீதிமன்றம் தெளிவாக சுட்டிக்காட்டி, குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு இருக்கும் ஒருவரின் படத்தை அரசு அலுவலகங்களில் பயன்படுத்துவதையும், அரசுப் பணத்தைக் கொள்ளையடித்தவர் என சட்டத்தின் முன் நிரூபிக்கப்பட்ட ஒருவருக்கு அதே அரசுப் பணத்தில் விளம்பரங்கள் தருவதும், மக்களின் வரிப்பணத்தில் செயல்படுத்தப்படும் அரசுத் திட்டங்களை அவர் பெயரில் நடைமுறைப் படுத்துவதும் தவறான முன்னுதாரணத்தை உருவாக்கிவிடும் என்பதைத்தான் தி.மு.கழகம் வலியுறுத்துகிறது.

அரசின் சார்பில் அவரது பெயரும் படமும் இடம்பெறுவது சட்ட விரோதமானதும், ஜனநாயக நெறிமுறைகளுக்கு நேர் எதிரானதுமாகும். இது ஆட்சியாளர்கள் கடைப்பிடிக்கும் நீதிமன்ற அவமதிப்பு என்பதுடன், பதவியேற்பின்போது அவர்கள் ஏற்ற உறுதிமொழிக்கு முற்றிலும் மாறுபட்ட அரசியல் சட்டவிதி மீறலுமாகும்.

இதனைச் சுட்டிக்காட்டினால், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தன்னுடைய அரசியல் சுயநலத்திற்காக என் மீது கண்டனக்கணை தொடுக்கிறார். ஜெயலலிதா அம்மையார் மீதான அவரது விசுவாசத்தைக் காட்ட வேண்டுமென்றால் அதற்கு நான்தானா கிடைத்தேன்? இப்போது ஜெயலலிதா மீது இத்தனை அக்கறை காட்டும் திரு.ஓ.பி.எஸ் அவர்கள், அ.தி.மு.க தொண்டர்கள் உள்ளிட்ட தமிழக மக்களின் மனதில் உள்ள ஜெயலலிதா அம்மையாரின் மரண மர்மம் குறித்த சந்தேகம் பற்றி எப்போது பேசினார்?

போயஸ் தோட்டத்தை ஆக்கிரமித்திருப்பவர்களின் தயவில் முதல்வராக பொறுப்பு ஏற்றிருந்த நாள்வரை பேசினாரா? பதவியைப் பறித்துக் கொண்டார்கள் என்றதும், ஜெயலலிதா அம்மையாரின் சமாதியில் ஊடக வெளிச்சத்துடன் தியானம் இருந்து, திடீர் ஞானோதயம் பெற்ற பிறகே, அதாவது ஜெயலலிதா அம்மையார் மரணமடைந்து ஏறத்தாழ இரண்டு மாதங்கள் கழித்து, பதவி சுகத்தை அனுபவிக்க இயலாமல் போனபிறகு ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது என்று சொன்னவர் திரு ஓ.பி.எஸ் அவர்கள். முதல்வராக அவர் பொறுப்பேற்றிருந்த நாட்களில் ஜெயலலிதா மரண மர்மம் குறித்து விசாரிக்க அவர் செய்த ஏற்பாடுகள் என்ன?

பதவி கிடைக்கும் என்றால் தனக்கு முதன்முதலாக பதவி வழங்கியவரையே மறந்துவிடுவதும், பதவி போனபிறகு அரசியல் நடத்த வேறெதுவும் கிடைக்காவிட்டால், மறந்து போன ஜெயலலிதாவின் படத்தையும் அவரது சமாதியையும் திடீரென பயன்படுத்துவதும் ஓ.பி.எஸ் போன்ற அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு வழக்கமாகிவிட்டது.

தி.மு.க வலியுறுத்துவது சட்டரீதியான நடைமுறையைத்தான். ஆனால், தங்கள் கட்சித் தலைவரின் மரண மர்மங்களையே பதவி சுயநலத்திற்காக மறைத்தவர்கள், இப்போது திடீர் விசுவாசம் காட்டும் அ.தி.மு.க.வின் அரசியல் விநோதத்தை தமிழக மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். உண்மை என்ன என்பது அவர்களுக்குத் தெரியும்”

-ஸ்டாலினின் இந்த அறிக்கையைத் தொடர்ந்து பன்னீர் செல்வத்துக்கும் அவருக்கும் இடையிலான அரசியல் உறவுகள் முறிந்து, அவர்களுக்கு இடையிலான மோதல் மேலும் வலுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

-செல்லியல் தொகுப்பு