லாஸ் ஏஞ்சல்ஸ் – ஆண்டுதோறும் உலகம் எங்கும் உள்ள கோடிக்கணக்கான சினிமா இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஆஸ்கார் விருதுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக நடைபெறுகின்றது.
மலேசிய நேரப்படி நாளை திங்கட்கிழமை காலை 9.00 மணிக்கு ஆஸ்கார் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி அஸ்ட்ரோவின் எச்பிஓ (HBO) அலைவரிசையில் நேரலையாக ஒளிபரப்பாகின்றது.
மற்ற விருதுகள் விழாக்களில் விருதுகளை வாரிக் குவித்திருக்கும் ‘லா லா லேண்ட்’ என்ற ஆங்கில இசைப்படம் இந்த ஆண்டுக்கான ஆஸ்கார் விழாவிலும் விருதுகளை வாரிக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
‘லா லா லேண்ட்’ படத்தின் கதாநாயகன் ரயான் கோஸ்லிங் – நாயகி எம்மா ஸ்டோன்…இருவருமே சிறந்த நடிகர், சிறந்த நடிகை ஆஸ்கார் விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார்கள்…
இந்தப் படம் 14 பிரிவுகளில் ஆஸ்கார் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றது.
எத்தனை விருதுகளை அள்ளி வரப் போகின்றது என்பதைக் காண ஹாலிவுட் படவுலகமும், உலக சினிமா இரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இதற்கிடையில், ஆஸ்கார் விருதுகள் நிகழ்ச்சியில் மேடையேறும் ஹாலிவுட் பிரபலங்கள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குறித்து தங்களின் எதிர்மறைக் கருத்துகளை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆஸ்கார் விருதுகள் அறிவிக்கப்பட்டவுடன் அந்த முடிவுகள் உடனுக்குடன் செல்லியலில் இடம் பெறும்.