கோலாலம்பூர் – வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் சகோதரர் கிம் ஜோங் நம்மை விஷம் தேய்த்துக் கொலை செய்ததாக நம்பப்படும் இரு பெண்கள் மீதும், இன்று புதன்கிழமை மலேசிய நீதிமன்றத்தில் கொலைக் குற்றம் சாட்டப்படவிருக்கிறது.
இது குறித்து அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ ஹாஜி மொகமட் அபாண்டி அலி நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிட்ட தகவலில், இரண்டு பெண்களும் மலேசிய குற்றவியல் சட்டம் பிரிவு 302-ன் கீழ் கொலைக் குற்றம் சாட்டப்படுவர் என்று தெரிவித்தார்.
வியட்னாமைச் சேர்ந்த டோன் தி ஹுவாங் (வயது 29), இந்தோனிசியாவைச் சேர்ந்த சித்தி ஆயிஷா (வயது 25) ஆகிய இரு பெண்களும் இன்று புதன்கிழமை சிப்பாங் நடுவர் நீதிமன்றத்தில் நிறுத்தப்படவிருக்கின்றனர்.