சென்னை – அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நியமனம் செய்யப்பட்டிருப்பது செல்லாது என முன்னாள் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்திருந்தது.
அப்புகாரின் அடிப்படையில் நேற்று பிப்ரவரி 28-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் சசிகலாவிற்கு உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, நேற்று சசிகலா தரப்பில் இருந்து தேர்தல் ஆணையத்திற்கு பதிலளிக்கப்பட்டது. அதில் அதிமுக சட்டவிதிகளின் படி தான் சசிகலா பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், சசிகலாவின் பதிலை முழுமையாக ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் பன்னீர் செல்வம் தரப்பு புகாரில் முடிவு எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.
எனினும், அதிமுக வட்டாரங்களில் சிலரின் கருத்துப் படி பார்த்தால், தேர்தல் ஆணையத்தின் முடிவு சசிகலா தரப்பிற்கு எதிராக வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகின்றது.
காரணம், அதிமுக சட்டவிதிகளின் படி, 5 ஆண்டுகள் கட்சியில் உறுப்பினர் அங்கம் வகித்தவர் மட்டுமே அதிமுக பொதுச்செயலாளராக முடியும். ஆனால் சசிகலாவோ தொடர்ந்து 5 ஆண்டுகள் கட்சியில் இல்லாத காரணத்தால், அவரது நியமனம் கேள்விக் குறியாகி இருப்பதாக அதிமுக-வைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கூறுகின்றனர்.
எனவே, தேர்தல் ஆணையம் பொதுச்செயலாளர் பதவி செல்லாது என அறிவிக்கும் முன்பே பதவியை ராஜினாமா செய்து விடும்படி அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், டாக்டர் வெங்கடேஷ் உள்ளிட்டோர் சிறையில் சசிகலாவைச் சந்தித்து ஆலோசனை கூறி வருகின்றனர்.
அப்படி சசிகலா பதவியை ராஜினாமா செய்தால், நடப்பு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியோ அல்லது டிடிவி தினகரனோ அதிமுக பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகின்றது.