சிப்பாங் – கிம் ஜோங் நம் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருந்த வட கொரிய இராசயன நிபுணர் ரி ஜோங் சோல் (படம்) இன்று வெள்ளிக்கிழமை கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து பலத்த காவலுடன் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.
47 வயதான ரி ஜோங் மீது கிம் ஜோங் நம் கொலை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட போதுமான ஆதாரங்கள் இல்லை என அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் டான்ஸ்ரீ அபாண்டி அலி நேற்று முன்தினம் புதன்கிழமை தெரிவித்ததைத் தொடர்ந்து அவர் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.
இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.40 மணியளவில் ஆயுதம் தாங்கிய காவல் துறையினர் புடைசூழ விமான நிலையத்திற்கு ரி கொண்டுவரப்பட்டார். அங்கு தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் மட்டும் பயன்படுத்தும் அவசரப் பாதை ஒன்றின் வழியாக அவர் நேரடியாக விமானம் நிற்கும் தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்.
அந்த சமயத்தில் வடகொரிய தூதரக சின்னம் தாங்கிய மெர்சிடிஸ் பென்ஸ் கார் ஒன்று விமானத்தின் ஓடுதளம் நோக்கி வந்தடைந்தது. அந்தக் காரில் ரி ஜோங்கின் குடும்பத்தினர், வட கொரிய தூதரக அதிகாரிகளுடன் இருந்தனர் என நம்பப்படுகின்றது.
பிப்ரவரி 13-ஆம் தேதி கிம் ஜோங் நம் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து ரி ஜோங் பிப்ரவரி 17-இல் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டார்.