Home Featured கலையுலகம் திரைவிமர்சனம்: ‘குற்றம் 23’ – விறுவிறுப்பான துப்பறியும் படம்! அருண் விஜய் நடிப்பு அருமை!

திரைவிமர்சனம்: ‘குற்றம் 23’ – விறுவிறுப்பான துப்பறியும் படம்! அருண் விஜய் நடிப்பு அருமை!

798
0
SHARE
Ad

kuttram-23-stills-photos-pictures-03கோலாலம்பூர் – கதைப்படி, கர்ப்பிணிப் பெண்கள் 3 பேர் அடுத்தடுத்து மர்மமான முறையில் மரணமடைகிறார்கள். அசிஸ்டெண்ட் கமிஷனரான அருண் விஜய், அவ்வழக்கை விசாரணை செய்யும் பொறுப்பை ஏற்கிறார். விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே, அவரது வீட்டிலும் ஒரு துர்மரணம் நிகழ்கிறது.

இடிந்து போகிறார் அருண்விஜய். தனது வீட்டில் நிகழ்ந்த மரணம் உட்பட இறந்த கர்ப்பிணிப் பெண்கள் மூவரின் மரணத்திலும் சில ஒற்றுமைகள் இருப்பதைக் கண்டறிகிறார். அதனை நோக்கி விசாரணை நகர்கையில், ‘23’ என்ற எண் காரணமாக இருப்பதை அறிகிறார்.

அந்த ‘23’ எண்ணுக்குப் பின்னால் தனியார் மகப்பேறு மருத்துவமனை ஒன்றின் மிகப் பெரிய சதிச்செயல் இருப்பது தெரிய வருகின்றது.

#TamilSchoolmychoice

அது என்ன? அதற்கும் கர்ப்பிணிப் பெண்களின் மரணத்திற்கும் என்ன தொடர்பு? என்பதை அருண் விஜய் கண்டறிவதே ‘ஈரம்’ அறிவழகன் இயக்கத்தில் இன்று வெள்ளிக்கிழமை வெளியாகியிருக்கும் ‘குற்றம் 23’ திரைப்படத்தின் கதை.

நடிப்பு

வெற்றிமாறன் கதாப்பாத்திரத்தில் அருண் விஜய் அசத்தலாக நடித்திருக்கிறார். போலீஸ் உடையில் அவ்வப்போது தான் வருகிறார். அசிஸ்டெண்ட் கமிஷ்னர் என்றாலும் ரொம்பவே அடக்கமாக நடிக்கும் படியாக அவரது கதாப்பாத்திரம் அமைக்கப்பட்டிருக்கிறது. இத்தனைக்கும் 10 பேரை அடிக்கும் அளவுக்கு கட்டுமஸ்தாக அருண் இருந்தாலும் கூட, சண்டைக் காட்சிகள் இயல்பு மாறாமல் இயற்கையாக அமைக்கப்பட்டிருப்பது சிறப்பு.

Kuttram-23-Arun-Vijay-Workout-Stillsமகிமா நம்பியார் தான் கதாநாயகி. ‘சாட்டை’ திரைப்படத்தில் பள்ளி மாணவியாக நடித்திருந்தாரே? ஆங்.. அவரே தான். சிறப்பான நடிப்பு. அருண் விஜய்க்கும், மகிமாவுக்கு இடையில் நடக்கும் காதல் காட்சிகளில் அவ்வளவு ஈர்ப்பு இல்லை. கதையின் முக்கியத்துவம் காரணமாக அதற்கு அவ்வளவு முக்கியத்துவம் தராமல் இருந்திருக்கக் கூடும். ஆனாலும் மகிமாவின் கதாப்பாத்திரம் ரசிக்கவே வைக்கிறது. குறிப்பாக அவருக்கான பின்னணிக் குரல் நிச்சயம் ‘சமீரா ரெட்டியை’ நினைவுபடுத்தும்.

தம்பி இராமையா.. படம் முழுவதும் அருண் விஜய் கூடவே விசாரணையில் ஈடுபடுகிறார். அவ்வப்போது நம்மை ஆசுவாசப்படுத்துவது தம்பி இராமையா தான். ஆங்காங்கே கொஞ்சம் கொஞ்சம் நம்மை சிரிக்க வைப்பவர். கிளைமாக்ஸ் காட்சியில் நம்மை மறந்து வயிறு குலுங்க சிரிக்க வைத்துவிடுகிறார்.

இவர்களோடு முக்கியக் கதாப்பாத்திரங்களில், வம்சி கிருஷ்ணா, அரவிந்த், அமித் உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர். வில்லனாக வம்சி கிருஷ்ணா வருகிறார். ஆனாலும் அவரது கதாப்பாத்திரத்திற்கான அழுத்தம் சற்று குறைவு தான்.

திரைக்கதை

இத்திரைப்படத்திற்கு மிகப் பெரிய பலம் திரைக்கதை தான். முற்பாதி ஒரு மரணத்தில் இருந்து தொடங்குகிறது. அந்த மரணம் ஏன் நிகழ்ந்தது? அதற்குப் பின்னால் இருப்பவர்கள் யார்? என்ற கேள்வியுடனேயே இடைவேளை வரை விறுவிறுப்பாக நகர்கிறது.

இடைவேளைக்குப் பிறகு திடீரென கதாநாயகனின் வீட்டிலும் அந்தக் கேள்வி முளைத்து விடுகின்றது?

அதன் பின் கதையில் இன்னும் விறுவிறுப்பு கூடி, இறுதியாக பதில் கிடைத்துவிடுகிறது. பதில் கிடைத்துவிட்ட பிறகு தான் வில்லனின் கதாப்பாத்திரத்தைப் பற்றியே சொல்லப்படுகின்றது.

Arunஅதனால் தான் வில்லன் வம்சி கிருஷ்ணா கதாப்பாத்திரம் அந்த அளவுக்கு ஈர்க்கவில்லை. ஒன்று வம்சி கிருஷ்ணாவின் சைக்கோதனத்தை இன்னும் அழுத்தமாகக் காட்டியிருக்கலாம் அல்லது மருத்துவமனையின் ‘வைட் காலர்’ குற்றங்களோடு நிறுத்தியிருக்கலாம். இவை இரண்டிற்கும் இல்லாமல் அந்தக் கடைசி 10 நிமிட சண்டைக்காட்சி தேவையில்லை என்றே தோன்றுகிறது.

என்றாலும், குழந்தையில்லா தம்பதிகளை இந்தச் சமூகம் எப்படி நடத்துகிறது? அவர்களின் துயரங்களை மகப்பேறு, கருத்தரித்தல் மருத்துவமனைகள் எப்படி தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி பணம் கொழிக்கின்றன போன்றவற்றை சாட்டையடி வசனங்களாலும், காட்சிகளாலும் சொல்லியிருக்கும் இயக்குநர் அறிவழகனுக்கு நிச்சயம் பாராட்டுகளைச் சொல்லியே ஆக வேண்டும்.

ஒளிப்பதிவு & இசை

பாஸ்கரன் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் மிகவும் ரசிக்க வைக்கின்றது. குறிப்பாக அந்த தேவாலய காட்சி பிரம்மிப்பை ஏற்படுத்துகிறது.

விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை காட்சிகளுக்கு மேலும் விறுவிறுப்பை ஏற்படுத்துகிறது. தாய்மை பற்றிய பாடல் கேட்டவுடன் ரசிக்க வைக்கின்றது.

மொத்தத்தில், ‘குற்றம் 23’ – விறுவிறுப்பான துப்பறியும் படம்! அருண் விஜய் நடிப்பு அருமை!

-ஃபீனிக்ஸ்தாசன்