Home Featured நாடு மே 25-க்கு முன்பாக பொதுத் தேர்தலா?

மே 25-க்கு முன்பாக பொதுத் தேர்தலா?

692
0
SHARE
Ad

general-election-14புத்ரா ஜெயா – மலேசியத் தகவல் இலாகாவின் ஊழியர்களின் வெளிநாடுகளுக்குச் செல்லும் விடுமுறை விண்ணப்பங்கள் அனைத்தும் மே 1-ஆம் தேதி முதல் இரத்து செய்யப்பட்டிருப்பதால், நோன்புப் பெருநாளுக்கான நோன்பு தொடங்கும் மே 25-ஆம் தேதிக்கு முன்பாக 14-வது பொதுத் தேர்தல் நடத்தப்படலாம் என்ற பரபரப்பு ஆரூடங்கள் மீண்டும் எழுந்துள்ளன.

கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதியிட்ட தகவல் இலாகாவின் சுற்றறிக்கையில், அந்த இலாகாவின் தலைமை இயக்குநர் இப்ராகிம் அப்துல் ரஹ்மான், மே 1 முதல் அனைத்து தகவல் இலாகா ஊழியர்களின் விடுமுறை விண்ணப்பங்கள் இரத்து செய்யப்படுவதாக அறிவித்திருக்கிறார். இந்தச் சுற்றறிக்கையை உறுதிப்படுத்தியுள்ள அவர், அரசாங்கத்தின் நாடாளுமன்றத் தவணை முடிவதற்கு ஓர் ஆண்டுக்கு முன்பாக, அடுத்த பொதுத் தேர்தலுக்கான ஆயத்தங்களுக்குத் தயாராகும் நோக்கில் இது போன்ற சுற்றறிக்கைகள் அனுப்புவது வழக்கமான ஒன்றுதான் என்றும் கூறியுள்ளார்.

பொதுத் தேர்தல் என்று வரும்போது, அரசாங்கத்தின் தகவல் இலாகாவின் பரப்புரைகள், வியூகங்கள், என பல முனைகளிலும் அந்த இலாகாவின் பங்கு மிக முக்கிய பங்கு வகிக்கும்.

#TamilSchoolmychoice

எப்போது பொதுத் தேர்தல்?

நோன்பு மாதம் ஏறத்தாழ மே 25-ஆம் தேதி தொடங்குகிறது. ஜூன் 25-ஆம் தேதி வாக்கில் நோன்புப் பெருநாள் கொண்டாடப்படும். எனவே, நோன்பு தொடங்குவதற்கு முன்பே பொதுத் தேர்தலை நடத்த தேசிய முன்னணி அரசாங்கம் முன்வரலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகின்றது.

இதன் மூலம், எதிர்க்கட்சிகள் தங்களின் பிரச்சாரங்களின் மூலம் தங்களைப் பலப் படுத்திக் கொள்ள வாய்ப்பு தராமல் – காலத்தைக் கடத்தாமல் – பொதுத் தேர்தலை நடத்தி முடித்து விடுவது என்பது தேசிய முன்னணியின் திட்டமாக இருக்கலாம் என்று கருதப்படுகின்றது.

சில நாட்களுக்கு முன்னால், பொதுத் தேர்தலுக்கு முந்திய தனது சுற்றுப் பயணத்தின் முதல் கட்டமாக சபா மாநிலம் சென்ற பிரதமர் நஜிப், அங்கு அம்னோ தலைவர்களையும், தேசிய முன்னணி தலைவர்களையும் சந்தித்ததும் பொதுத் தேர்தலுக்கு முன்பான முன்னோட்டமாகப் பார்க்கப்படுகின்றது.

மே 25-க்கு முன்பாக பொதுத் தேர்தல் நடத்தப்படாவிட்டால், தேசிய முன்னணியின் பொதுத் தேர்தலுக்கான அடுத்த காலகட்ட இலக்கு செப்டம்பராக இருக்கலாம் என்ற ஆரூடங்களும் நிலவுகின்றது.

செப்டம்பரிலும் பொதுத் தேர்தல் நடைபெறாவிட்டால், நஜிப்பின் அரசாங்கம் தங்களின் தவணைக் காலத்தை முழுமையாக மே 2018 வரை நீட்டித்து விட்டு அதன் பின்னர்தான் பொதுத் தேர்தலை அறிவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

தேர்தல் ஆணையம் முன்மொழிந்துள்ள தொகுதிகளுக்கான எல்லை மறுசீரமைப்புகள் குறித்த இறுதி முடிவுகள் வரும்வரை காத்திருப்பதா?

அல்லது, அதற்கு முன்பாகவே, பொதுத் தேர்தலைச் சந்திப்பதா? என எழந்துள்ள  கேள்விகளுக்கு நஜிப் எத்தகைய முடிவை எடுக்கப் போகிறார் என்பதை வைத்துத்தான் பொதுத் தேர்தலுக்கான தேதிகளும் அமையும்.

தொகுதி எல்லைச் சீரமைப்பு மீதிலான முடிவுகள் வரும்வரை காத்திருப்பது தேசிய முன்னணிக்கு சாதகமாக அமையலாம். ஆனால், அதற்கு மேலும் காலதாமதம் ஆகுமானால், அதனைப் பயன்படுத்தி எதிர்க்கட்சிக் கூட்டணி பலம் பெற்று விடலாம் என்ற அச்சமும் நிலவுகின்றது.

-இரா.முத்தரசன்