Home Featured நாடு “தமிழ் மொழி-இலக்கியம் தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு” சுப்ரா பெருமிதம்!

“தமிழ் மொழி-இலக்கியம் தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு” சுப்ரா பெருமிதம்!

1264
0
SHARE
Ad

subra-3-feature

கோலாலம்பூர் – நேற்று வெளியான 2016-ஆம் ஆண்டுக்கான எஸ்.பி.எம் தேர்வு முடிவுகளில் சிறந்த தேர்ச்சிப் பெற்று பெற்றோருக்கும் பள்ளிக்கும் பெருமை தேடித் தந்த அனைத்து மாணவர்களுக்கும் மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் தனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார்.

கடந்த ஆண்டு மொத்தம் 434,535 மாணவர்கள் எஸ்.பி.எம் தேர்வை எழுதிய வேளையில் அவர்களில் 8,647 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் “ஏ” தேர்ச்சியைப் பெற்றுள்ளனர். Indeks Gred Purata Nasional (GPN) எனப்படும் தேசியச் சராசரி குறியீட்டுத் தரம் கடந்த ஆண்டைக் காட்டிலும் முன்னேற்றம் கண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

“இதைத்தவிர, எஸ்.பி.எம் தேர்வில் ஒட்டுமொத்தமாக இந்திய மாணவர்களின் தேர்ச்சி நிலையும் சிறப்பாக இருப்பதை நான் அறிவேன். அதுவும் எஸ்.பி.எம் தேர்வில் தமிழ் மொழியையும் தமிழ் இலக்கியத்தையும் தேர்வு பாடமாக எடுத்த இந்திய மாணவர்களின் “ஏ” நிலை தேர்ச்சி விகிதம் அதிகமாக இருப்பது பெருமையளிக்கின்றது. குறிப்பாக, 2015-ஆம் ஆண்டு தமிழ்மொழி பாடத்தை எடுத்த இந்திய மாணவர்களில் 31.5% மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் “ஏ” தேர்ச்சி பெற்றிருக்கும் வேளையில் கடந்த ஆண்டுக்கான தேர்வு முடிவில் இவ்வெண்ணிக்கை 32.4%க உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது நம் இந்திய மாணவர்களுக்கும் தமிழ்மொழியின் அவசியத்தை நன்கு எடுத்துணர்த்துகின்றது. தமிழ் மொழியையும் தமிழ் இலக்கியத்தையும் தேர்வு பாடமாக எடுக்கும் இந்திய மாணவர்கள் பின்தங்குவதில்லை என்பதற்கு இது நல்லதோர் எடுத்துக்காட்டாகும்” என்றும் டாக்டர் சுப்ரா நேற்று வெளியிட்ட அறிக்கையொன்றில் தெரிவித்தார்.

 

SPM

இந்தத் தேர்வு முடிவானது மாணவர்கள் தங்களது வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்குச் செல்வதற்கு ஏதுவாக அமைக்கப்பட்ட தளங்கள் மட்டுமின்றி அவர்களது மேற்கல்வியைத் தொடரவும் உயர்கல்விக்கூடங்களில் காலடி எடுத்து வைப்பதற்கான முதல் படியும் ஆகும் என்றும் குறிப்பிட்டிருக்கும் சுப்ரா, “எனவே, மாணவர்கள் தங்களின் மேற்கல்விக்கு விண்ணப்பிப்பதற்கு முன்னர், உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காமல் காலத் தேவைகளுக்கும் மாற்றத்திற்கும் ஏற்ப நன்றாகக் கலந்தாலோசித்து மிகச் சரியான வழியைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என இச்சமயத்தில் கேட்டுக் கொள்கிறேன். வரும் சனிக்கிழமை தொடங்கி, நாடு தழுவிய நிலையில் ம.இ.கா புத்ரா பிரிவினர் பல பகுதிகளில் உயர் கல்விக்கான வழிகாட்டுக் கருத்தரங்கை நடத்தவுள்ளனர். எனவே, மாணவர்களும் பெற்றோர்களும் இந்த அரிய வாய்ப்பினைப் பயன்படுத்தி சரியான முடிவை எடுக்க வேண்டும்” என்றும் கேட்டுக் கொண்டார்.

“அதே வேளையில், தேர்வில் சிறந்த தேர்ச்சிப் பெறாத மாணவர்கள் மனம் தளர்ந்து போகாமல், தொழில் திறன் பயிற்சிகளின் வழி தங்களை மேம்டுபடுத்திக் கொண்டு வாழ்க்கையில் வெற்றியடைய வேண்டும். நான் முன்னமே கூறியது போல் நாட்டில் இந்தியர்களுக்காகப் பல தொழில்திறன் பயிற்சிகளுக்கான வாய்ப்புகள் அதிகமாக ஒதுக்கப்பட்டு வரும் வேளையில், ஒவ்வோர் ஆண்டும் ஒதுக்கப்பட்ட இடங்கள் அனைத்தும் நிரப்பப்படாமலேயே இருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும் சிறந்த எதிர்காலம் இத்தகைய தொழில் திறன் பயிற்சிகள் வழி காத்துக் கொண்டிருக்கின்றது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். பெற்றோர்களும் அவர்களுக்குத் தொடர்ந்து ஊக்குவிக்க வேண்டும்” என்றும் சுப்ரா தனது அறிக்கையில் மேலும் கேட்டுக் கொண்டார்.