Home Featured கலையுலகம் திரைவிமர்சனம்: புரூஸ்லீ – பெயருக்கு ஏற்ற அதிரடியோ, சுவாரசியமோ இல்லை!

திரைவிமர்சனம்: புரூஸ்லீ – பெயருக்கு ஏற்ற அதிரடியோ, சுவாரசியமோ இல்லை!

1012
0
SHARE
Ad

Bruceleeகோலாலம்பூர் – சின்ன வயதில் இருந்தே எதெற்கெடுத்தாலும் பயப்படும் ஜெமினி கணேசனுக்கு (ஜீ.வி.பிரகாஷ்), அவரது அம்மா புரூஸ்லீ படங்களைக் காட்டி நீ தான் புரூஸ்லீ என்று ஊக்கம் கொடுக்கிறார். அதைக் கேட்டு தான் ஒரு புரூஸ்லீ என்று நினைத்துக் கொண்டே வளர்கிறார் ஜீ.வி.பிரகாஷ்குமார்.

இது தான் ‘புரூஸ்லீ’ படத்தின் பெயர் காரணம். ஆனால் இதோடு அந்தப் பெயர் காரணம் முடிந்து விடுகிறது. அதன் பின்னர் புரூஸ்லீ என்று சொல்லிக் கொள்ளும் படியான எந்த ஒரு விசயமும், கதாநாயகன் ஜீ.வி.பிரகாஷின் கதாப்பாத்திரத்திலோ அல்லது படத்திலோ இடம்பெறவில்லை.

இதுவரை தனக்கு ஏற்ற கதாப்பாத்திரங்களாகத் தேர்ந்தெடுத்து நடித்து வந்த ஜீ.வி.பிரகாஷ், தனக்கு எந்த ஒரு முக்கியத்துவமும் இல்லாத ஒரு கதையில் எப்படி? நடிக்க ஒப்புக் கொண்டார் என்பது தெரியவில்லை. இதற்கு முந்தைய படங்களில் தனக்கே உரிய ‘வெர்ஜின் பாய்’ சமாச்சாரங்களை வைத்தும், “அப்படி இப்படி எப்படி எப்படி?” என்று குத்தாட்டம் போட்டும் சமாளித்து வந்தார். ஆனால் இந்தப் படத்தில் அவருக்கு நடிப்பதற்கும், திறமைகளை வெளிப்படுத்துவதற்குமான இடங்கள் மிகக் குறைவு என்றே சொல்ல வேண்டும்.

#TamilSchoolmychoice

ஜீ.வி.பிரகாஷ் திரையில் வந்தாலே, ‘ஐயோ’ என்று எரிச்சலடையும் வகையில், “மச்சி போலீஸ்ட்ட போலாமா?”, “மச்சி கேமராவ தூக்கி தண்ணில போட்றலாம் டா” என்று தேய்ந்து போன ரெக்கார்டர் மாதிரி திரும்பத் திரும்ப ஒரே வசனத்தை சொல்லிக் கொண்டு படம் முழுவதும் நடித்திருக்கிறார்.

மாறாக, படத்தில் கதாநாயகனுக்குக் கிடைக்க வேண்டிய அத்தனை கைதட்டல்களையும், ‘காட்பாதர்’ கதாப்பாத்திரத்தில் வில்லனாக நடித்திருக்கும் முனீஸ்காந்த் தட்டிச் சென்று விடுகின்றார். ஹாலிவுட் படங்களின் பாணியில், கோட்டு சூட்டு போட்டுக் கொண்டு வாய் பேசாமல் சைகைகளாலேயே பதில் சொல்வது, பார்வையாலேயே மிரட்டுவது என அவரது கதாப்பாத்திரம் மிகவும் ரசிக்க வைக்கின்றது. குறிப்பாக ஆன்ந்த்ராஜை அவர் முறைக்கும் அந்தக் காட்சியும், அதன் பின்னணி இசையும் மிரட்டல்.

கதைச் சுருக்கம்

GVprakashஜீ.வி.பிரகாஷ், கீர்த்தி, பாலசரவணன், அவரது காதலியாக ஒரு புதுமுக நடிகை. இவர்கள் நால்வரும் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்கள். மன்சூர் அலிகான் ரசிகரான ஜீ.வி.பிரகாஷ், அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள ஆசைப் படுகிறார். அதற்காக மன்சூர் அலிகானின் காரைப் பின் தொடர்ந்து செல்கிறார்.

அப்போது, முனீஸ்காந்தால், மன்சூர் அலிகான் சுட்டுக் கொல்லப்படும் காட்சி ஜீ.வி.பிரகாஷ் வைத்திருக்கும் கேமராவில் பதிவாகிவிடுகிறது. அந்த ஆதாரத்தை ஜீ.வி.பிரகாஷ், கீர்த்தி, பாலசரவணன் கூட்டணி போலீசிடம் சேர்க்கும் முயற்சியில் முனீஸ்காந்திற்கு எதிரியாகி விடுகிறார்கள்.

அதனால் தனது ஆட்களை வைத்து கீர்த்தியையும், அவரது தோழியையும் முனீஸ்காந்த் கடத்திவிடுகிறார். அவர்களை ஜீ.வி.பிரகாஷும், பாலசரவணனும் எப்படி காப்பாற்றுகிறார்கள்? என்பது தான் மீதிக் கதை.

திரைக்கதை

GVமுதல்பாதி முழுக்க கதாப்பாத்திர அறிமுகங்களிலேயே திரைக்கதை அமைத்தும், இரண்டாம் பாதியில் அந்தக் கதாப்பாத்திரங்களின் செயல்பாடுகளையும் விவரித்திருக்கிறார் இயக்குநர். கதாப்பாத்திர அறிமுகத்தில் நன்றாக ரசிகர்களிடம் எடுபடுவது முனீஸ்காந்தின் கதாப்பாத்திரம் மட்டுமே.மற்றவை அவ்வளவாக ரசிக்கும் படியாக இல்லை.

ஜீ.வி.பிரகாஷும், பாலசரவணனும் சேர்ந்து கண்ணாபின்னாவென குடிப்பது போலவும், காமெடி என்ற பெயரில் எதையாவது கிறுக்குத்தனமாகப் பேசுவது போலவும் காட்சிகள் வந்திருப்பது எரிச்சலூட்டுகிறது.

கதாநாயகியையும், அவரது தோழியையும் முனீஸ்காந்திடமிருந்து காப்பாற்றுவது என்ற ஒரு வரி தான் இரண்டாம் பாதிக் கதை. ஆனால் அந்த ஒரு வரியை ஜவ்வாக இழு இழுவென இழுத்து, மொட்டை ராஜேந்திரனை வைத்து, அதற்கு ஒரு மொக்க பிளாஷ்பேக்கையும் வைத்து கடைசியில் ரசிகர்களை கதற கதற திரையரங்கை விட்டு வெளியே அனுப்புகிறார்கள்.

மொட்டை ராஜேந்திரன் ரஜினியைப் போல் ஆடுவது போல் பாடல் ஒன்றையும் வைத்திருக்கிறார்கள். ஏற்கனவே ஆமையாக நகரும் திரைக்கதையால் எரிச்சலில் இருக்கும் நம்மால் அதை ரசிக்க முடியாமல் போய்விடுகிறது.

ஒளிப்பதிவு, இசை

பி.வி.சங்கர் ஒளிப்பதிவில் காட்சிகள் சுமார் இரகம். பிரம்மாண்டமான, அழகான என வர்ணிக்கும் அளவிற்கு காட்சிகள் மனதில் பதியவில்லை.

Brucelee1பின்னணி இசையைப் பொறுத்தவரையில், ஜீ.வி.பிரகாஷ் தனது திறமையை நன்றாகவே நிரூபித்திருக்கிறார். அதில் எந்த ஒரு குறையையும் ரசிகர்களுக்கு அவர் வைக்கவில்லை. பாடல்கள் சுமார் தான்.

மொத்தத்தில், ‘புரூஸ்லீ’ – பெயருக்கு ஏற்ற அதிரடியோ, சுவாரசியமோ இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

-ஃபீனிக்ஸ்தாசன்