சென்னை – இளையராஜாவுக்கும், எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கும் இடையில் ஏற்பட்டிருக்கும் காப்புரிமை மீதான சர்ச்சை குறித்து பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தனது கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார்.
சென்னையில் இன்று திங்கட்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்திருந்த ரஹ்மானை பத்திரிக்கையாளர்கள் சூழ்ந்து கொண்டு, இளையராஜாவுக்கும், பாலசுப்ரமணியத்துக்கும் இடையில் ஏற்பட்டிருக்கும் சட்ட சர்ச்சைகள் குறித்து கேள்விகள் எழுப்பினர்.
முதலில் இளையராஜாவைப் பற்றி சொல்ல எனக்கு தகுதி இல்லை என நழுவப் பார்த்த ரஹ்மான் பின்னர் காரில் ஏறச் சென்றபோது, பத்திரிக்கையாளர்கள் சூழ்ந்து கொண்டு மீண்டும் இது குறித்து அவரிடம் கேட்டபோது, “நான் யோசிக்காமல் எதையும் சொல்வதில்லை. இதைப் பற்றி யோசித்துவிட்டுப் பின்னர் பதில் கூறுகிறேன்” என்று கூறியுள்ளார்.
கங்கை அமரன் எஸ்பிபிக்கு ஆதரவு
இந்த சர்ச்சையில், இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன் கருத்து கூறும்போது, “இளையராஜா வழக்கறிஞர் மூலம் கடிதம் கொடுத்தது தவறு. இளையராஜாவின் இசையை வியாபார நோக்கத்தோடு பார்க்கக்கூடாது. அவரது இசை உலகளாவிய அளவில் அனைவராலும் இரசிக்கப்படுகிறது. அவரது இசைக்கு ஏற்கனவே, சம்பளம் வாங்கியாகிவிட்டது. இன்னும் வருமானம் குறித்து கவலைப்படுவது ஏன்? பாடல்கள் போட்டதே மக்கள் கேட்க வேண்டும் என்பதற்காகத்தானே?” என்று கூறியுள்ளார்.
மேலும் எம்.எஸ்.விஸ்வநாதன், ஜி.இராமநாதன், போன்றவர்களெல்லாம் எங்களின் பாடல்களைப் பாடாதீர்கள் என்று கூறியிருக்கிறார்களா?” என்றும் கங்கை அமரன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.