கோலாலம்பூர் – மலேசியாவின் ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் ஆங்கில நாளிதழின் விற்பனை பெருமளவில் சரிந்ததால், அதன் வணிகக் கட்டமைப்பைச் சீரமைக்கும் நோக்கில் திரெங்கானு மாநிலத்தில், உலு திரெங்கானு நகரில் உள்ள தனது அச்சு இயந்திர மையத்தை அந்நிறுவனம் விற்பதற்கு முன்வந்திருக்கின்றது.
அதிகரித்து வரும் நியூஸ் பிரிண்ட் ரக காகிதத்தின் விலை, பத்திரிக்கை விற்பனை சரிவு, போன்ற பல்வேறு காரணங்களால், உலகம் எங்கிலும், குறிப்பாக மலேசியாவிலும், அச்சில் வெளிவரும் நாளிதழ்களின் விற்பனை தொடர்ந்து சரிந்து வருகிறது.
இந்த சிக்கலில் நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் பத்திரிக்கையும் பாதிக்கப்பட்டு, அதன் காரணமாக, கடந்த ஆண்டே, செனாய், ஜோகூரிலுள்ள அச்சு இயந்திர மையம் மூடப்பட்டது. அதைத் தொடர்ந்து தற்போது உலு திரெங்கானுவில் உள்ள அச்சு இயந்திர மையம் விற்பனைக்கு வருவதாகவும், அதன் விலை 25 மில்லியன் ரிங்கிட் என்றும் அந்தப் பத்திரிக்கை அண்மையில் விளம்பரம் ஒன்றை வெளியிட்டிருக்கின்றது.
இதைத் தொடர்ந்து இனி ஷா ஆலாம் (சிலாங்கூர்), பிறை (பினாங்கு) ஆகிய இரு நகர்களில் மட்டுமே நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் பத்திரிக்கை அச்சடிக்கப்படும்.
மலேசியாவின் எல்லா மொழி அச்சுப் பத்திரிக்கைகளும் கடந்த ஆண்டு முதல் தொடர்ந்து விற்பனையில் சரிவைச் சந்தித்து வருகின்றன என ஏபிசி எனப்படும் பத்திரிக்கை விற்பனைக்கான தணிக்கை மையம் (Audit Bureau of Circulation-ABC) வெளியிட்ட அறிக்கையும் தெரிவிக்கிறது.
எல்லா நிலைகளிலும் பிரபலமடைந்து வரும் மின்னியல் (டிஜிடல்) வடிவத்திற்கு பத்திரிக்கை வாசகர்கள் மாறி வருகிறார்கள் என்றும் அந்த அறிக்கை மேலும் தெரிவிக்கிறது.
2014-ஆம் ஆண்டில் வெளியிட்ட ஏபிசி வெளியிட்ட அறிக்கையில் நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் பத்திரிக்கையின் விற்பனை ஏறத்தாழ 30 சதவீதம் சரிந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.