கோலாலம்பூர் – அச்சு நாளிதழ்களும், மாத, வார இதழ்களும் தொடர்ந்து வணிக ரீதியாக வெற்றிகரமாகச் செயல்பட முடியாமல் பல நாடுகளிலும் மூடப்படும் அவல நிலை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
அந்த வரிசையில் மலேசியாவில் இயங்கும் புளூ இங்க் ஹோல்டிங்ஸ் மலேசியா நிறுவனம் கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதியோடு தனது வணிக நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்வதாக அறிவித்திருக்கிறது.
இந்நிறுவனம் சிங்கப்பூர் பிரெஸ் ஹோல்டிங்ஸ் என்ற ஊடக நிறுவனத்தின் மலேசியப் பிரதிநிதியாகவும் செயல்பட்டு வந்தது. சிங்கப்பூர் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கும் சிங்கப்பூர் பிரெஸ் ஹோல்டிங்ஸ் புளூ இங்க் நிறுவனத்தில் 70 விழுக்காடு பங்குகளைக் கொண்டிருந்தது.
மலேசிய அச்சு இதழ்களை மலேசியாவில் பதிப்பிக்கும் தனி நிறுவனமாக புளூ இங்க் சுதந்திரமாக இயங்கி வந்தது. கிளியோ (Cleo), கொஸ்மோபொலிடன் (Cosmopolitan), ஹார்பர்ஸ் பசார் (Harper’s Bazaar), ஹெர் வோர்ல்ட் (Her World), ஃபீமேல் (Female) போன்ற புகழ்பெற்ற இதழ்களை நீண்ட காலமாக புளூ இங்க் நடத்தி வந்தது.
“விற்பனையாகும் பிரதிகளின் எண்ணிக்கை வீழ்ச்சி, அதன் பிரதிபலிப்பாக வருமானம் குறைந்தது இவற்றோடு அண்மையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொவிட்19 தாக்கம் எல்லாம் சேர்ந்து மலேசியாவில் அச்சு இதழ்களுக்கான எதிர்காலத்தைக் கேள்விக் குறியாக்கி இருக்கின்றன” என சிங்கப்பூர் பிரெஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம் அண்மையில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
சிங்கையில் ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ், பிசினஸ் டைம்ஸ் ஆகிய நாளிதழ்களையும் சிங்கப்பூர் பிரெஸ் ஹோல்டிங்ஸ் பதிப்பிக்கிறது.
மின்னிலக்க ஊடகங்களிடமிருந்து சந்தித்த வணிகப் போட்டிகளும் புளூ இங்க் மூடப்படுவதற்கான காரணங்களுள் ஒன்று என அந்நிறுவனத்தின் மலேசியத் தலைமைச் செயல் அதிகாரி தனது ஊழியர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவித்திருக்கிறார்.