Home Featured நாடு “ஷாரியா விவகாரம்: பொறுப்போடு செயல்படுகிறார் சுப்ரா”

“ஷாரியா விவகாரம்: பொறுப்போடு செயல்படுகிறார் சுப்ரா”

869
0
SHARE
Ad

subra-2கோலாலம்பூர் – ஷாரியா சட்ட விவகாரத்தில் மஇகா சார்பில், தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் பொறுப்புணர்வோடும், சமுதாயக் கடமையோடும், நடவடிக்கைகள் எடுத்து வருகிறார் என்றும், அதே வேளையில் மிகவும் உணர்ச்சிகரமான இந்த மத விவகாரத்தைக் கவனத்தோடும், மிகுந்த எச்சரிக்கையோடும் கையாண்டு வருகிறார் என்றும் மஇகா தேசிய தகவல் பிரிவுத் தலைவர் டத்தோ வி.எஸ்.மோகன் தெரிவித்தார்.

“இதனைப் புரிந்து கொள்ளாமல், இன்று (23 மார்ச் 2017) தமிழ் நாளிதழ் ஒன்று வெளியிட்டிருக்கும் செய்தியில், மிகவும் மோசமான முறையில் தேசியத் தலைவரை விமர்சித்தும், உண்மைகளைத் திரித்தும், நாட்டில் இந்துக்களிடையேயும், இந்தியர்களிடையேயும் மத உணர்வுகளைத் தூண்டும் விதத்திலும் செய்தி வெளியிட்டிருக்கின்றது. இந்த நாட்டில் மறைமுகமாக ஹூடுட் சட்டங்கள் ஊடுருவுவதை மஇகா வன்மையாக எதிர்க்கின்றது. இதுகுறித்து மஇகா தேசியத் தலைவர் இரண்டு முறை பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்குடன் சந்திப்பு நடத்தி கட்சியின் நிலைப்பாட்டையும், இந்திய சமுதாயத்தின் எதிர்பார்ப்பையும் தெளிவாக எடுத்துரைத்திருக்கிறார். எங்களின் அதிகாரப்பூர்வ விளக்கத்தையும், ஆட்சேபங்களையும் நாங்கள் பிரதமரிடம் தெரிவித்திருக்கிறோம்” என்றும் இன்று வியாழக்கிழமை வெளியிட்ட பத்திரிக்கை அறிக்கை ஒன்றில் மோகன் (படம்) தெரிவித்தார்.

mohan-vs-mic“அதுமட்டுமின்றி இந்த விவகாரம் குறித்து மஇகா மத்திய செயலவைக் கூட்டங்களில் நாங்கள் விரிவாக விவாதித்திருக்கின்றோம். எங்களின் சட்ட நிபுணர்கள் இந்த விவகாரம் குறித்த சட்ட அம்சங்களை நுணுக்கமாக ஆராய்ந்து வருகிறார்கள். மேலும் அரசு சார்பற்ற 35 இந்திய அமைப்புகளை இரண்டு வாரத்திற்கு முன்பு, அழைத்து அவர்களின் கருத்துகளையும் நேரடியாகக் கேட்டறிந்துள்ளோம். இதிலிருந்து இந்தப் பிரச்சனையை எவ்வளவு தீவிரமாகவும், அணுக்கமாகவும் கண்காணித்து நடவடிக்கைகள் எடுத்து வருகின்றோம் என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள்” என்றும் ஷாரியா சட்ட விவகாரத்தில் மஇகா எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து மோகன் விவரித்தார்.

#TamilSchoolmychoice

“ஆனால், இவ்வளவும் செய்த பின்னர் இந்த முக்கியமான தருணத்தில் நாங்கள் எத்தகைய நடவடிக்கை எடுத்து வருகின்றோம் என்பதை, இந்த மத விவகாரத்தின் உணர்ச்சிகரமான தன்மை காரணமாக பத்திரிக்கைகளில் பகிரங்கமாக, வெளியிடாமல், விவாதிக்காமல், சமுதாயத்தின் நன்மை ஒன்றை மட்டுமே கருதி, பொறுப்புணர்வோடு மஇகா செயல்பட்டு வருகிறது.  பெரும்பான்மை இந்திய சமுதாயத்தின் ஆதரவைப் பெற்ற கட்சி என்ற முறையில் மஇகா பொறுப்புணர்வோடு செயல்பட்டு வரும் அதே சமயத்தில் தேசிய முன்னணியில் தொன்று தொட்டு இருந்து வரும் அரசியல் தோழமையைக் கவனத்தில் கொண்டும், மற்ற மதங்களின் உணர்வுகளைப் புண்படுத்தாத வகையிலும் அணுக வேண்டிய கடப்பாட்டையும் மஇகா கொண்டிருக்கின்றது” என்றும் மோகன் தனது அறிக்கையில் மேலும் விளக்கினார்.

உண்மைக்குப் புறம்பான செய்திகள்

MIC logoஉண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட்டு மக்களைக் குழப்பியும், மத உணர்வுகளைத் தூண்டும் விதத்திலும் செய்தி வெளியிட்டு வரும் அந்த நாளிதழை விட கூடுதலான பொறுப்பும், கடமையும், இந்திய சமுதாயத்தின் மீது அக்கறையும் மஇகாவுக்கு இருக்கின்றது என்பதையும் நினைவுபடுத்தியிருக்கும் மோகன், “எங்களின் பொறுப்புகளையும், சமுதாயத்தின்பால் நாங்கள் கொண்டிருக்கும் கடப்பாட்டையும் நாங்கள் முழுமையாக அறிந்துள்ளோம். இதுகுறித்து யாரும் எங்களுக்கு நினைவுபடுத்தவோ, போதிக்கவோ தேவையில்லை” என்றார்.

“அந்த நாளிதழ் பொய்யான செய்தியை வெளியிட்டிருக்கின்றது என்பதற்கு சிறந்த உதாரணம் இன்றைய பத்திரிக்கை செய்தியில், “நேற்று புத்ரா ஜெயாவில் உள்ள தமது அலுவலகத்தில் பரிவாரங்களை அழைத்து இது ஹூடுட் சட்டம் அல்ல ஷரியா நீதிமன்றச் சட்டம் என்று மஇகாவினர் மத்தியிலும், இந்திய சமுதாயத்தினரிடமும் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று டாக்டர் சுப்பிரமணியம் உத்தரவு பிறப்பித்துள்ளார்” என்று அந்தப் பத்திரிக்கை குறிப்பிட்டிருப்பதாகும். ஆனால், நேற்று காலையில் நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்து கொண்டு, அமைச்சு தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளித்து உரையாற்றிய, டாக்டர் சுப்ரா, அதன் பின்னர் பிற்பகல் வரை, கோலாலம்பூரின் ஜாலான் சென்ராசாரி சாலையிலுள்ள சுகாதார அமைச்சு அலுவலகத்தில்தான் இருந்தார். புத்ராஜெயா அலுவலகமே செல்லவில்லை. அந்தப் பத்திரிக்கை குறிப்பிட்டிருப்பதுபோல், எந்தப் பரிவாரத்தையும் அழைத்து கூட்டமும் போடவில்லை, ஷாரியா விவகாரம் குறித்து யாருக்கும் எந்தவித உத்தரவும் பிறப்பிக்கவில்லை. பிற்பகல் 2.30 மணிக்கு துணைப் பிரதமரும், தேசிய முன்னணி துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் சாஹிட் ஹாமிடி தலைமையில் நடைபெற்ற தேசிய முன்னணி நிர்வாகக் கூட்டத்தில் கலந்து கொள்ள டாக்டர் சுப்ரா தனது கோலாலம்பூர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.
அந்தக் கூட்டத்திலும், மஇகா தேசியத் தலைவர் இந்த ஷாரியா விவகாரத்தை மீண்டும் எழுப்பி அதற்குரிய பரிகாரம் காணப்பட வேண்டிய அவசியத்தைக் கூட்டத்தில் எடுத்துரைத்தார் என்பதையும் மக்களின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகின்றோம். அதன்பின்னர், நேற்று மாலையில் பிரதமரும், தேசிய முன்னணி தலைவருமான டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தலைமையில் நடைபெற்ற தேசிய முன்னணி உறுப்பியக் கட்சித் தலைவர்களுடனான கூட்டத்திலும் டத்தோஸ்ரீ சுப்பிரமணியம் கலந்து கொண்டு ஷாரியா விவகாரத்தில் மஇகாவின் நிலைப்பாடு குறித்து எடுத்துரைத்தார்” என்றும் மோகன் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கின்றார்.

“ஆனால், இவ்வளவு உண்மைகளையும் மறைத்து, ஏதோ, நேற்று எல்லாவற்றையும் அருகிலிருந்து பார்த்ததுபோல் அந்தப் பத்திரிக்கையின் செய்தியாளர் டாக்டர் சுப்பிரமணியம் புத்ரா ஜெயா அலுவலகத்தில் இருந்தார் என செய்தி போட்டிருக்கின்றார். இதனை மஇகா வன்மையாகக் கண்டிக்கிறது என்பதோடு, பத்திரிக்கை தர்மத்திற்கு முரணான இத்தகைய செய்திகளை வெளியிட்டு வரும் அந்தப் பத்திரிக்கைக்கு மஇகா சார்பில் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
சமுதாயத்தில் பிரிவினை ஏற்படுத்தும் வண்ணமும், மதப் பிரச்சனைகளைத் தூண்டும் விதத்திலும், இந்தப் பத்திரிக்கை தொடர்ந்து எழுதி வருகின்றது. சொந்த சுயநோக்கத்திற்காக, வியாபார நோக்கங்களுக்காக இவ்வாறு எழுதியிருக்கும் அந்தப் பத்திரிக்கையின் தீய உள்நோக்கங்களை மக்களிடத்தில் நாம் எடுத்துக் கூற வேண்டிய கட்டாயத்திற்கு, அந்தப் பத்திரிக்கையின் இன்றைய செய்தி நம்மை உள்ளாக்கியிருக்கின்றது என்பதையும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று தனது அறிக்கையில் வி.எஸ்.மோகன் மேலும் தெரிவித்தார்: