ஜகார்த்தா – இந்தோனிசியாவில் கிராமம் ஒன்றில், கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தேடப்பட்டு வந்த 25 வயதான நபர், அப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட 7 மீட்டர் நீளமுடைய மலைப்பாம்பு ஒன்றின் வயிற்றில் இருந்து இறந்த நிலையில் வெளியே எடுக்கப்பட்டிருக்கிறார்.
சுலாவேசி என்ற தீவைச் சேர்ந்த கிராமத்தில், வாழ்ந்து வந்த அக்பர் சலுபிரோ என்ற இளைஞர், கடந்த ஞாயிற்றுக்கிழமை பனை எண்ணெய் எடுக்கும் பணிக்குச் செல்வதாக தனது மனைவியிடம் கூறிச் சென்றிருக்கிறார். பின்னர் வீடு திரும்பாத அவரை அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடினர்.
இந்நிலையில், அக்பரின் தோட்டத்திற்கு அருகில் மலைப்பாம்பு ஒன்று எங்கும் நகரமுடியாமல் நெளிந்து கொண்டிருப்பதை அப்பகுதி மக்கள் பார்த்திருக்கின்றனர். பாம்பின் வயிற்றில் மனித உருவம் போல் தெரிவதை அவர்கள் கவனித்திருக்கின்றனர். உடனடியாக பாம்பின் வயிற்றை கத்தியால் கிழித்த போது, அதன் உள்ளே அக்பரின் உயிரற்ற உடல் காணப்பட்டிருக்கிறது.
கிராமவாசிகள் அப்பாம்பின் வயிற்றைக் கிழித்து உடலை வெளியே எடுக்கும் காணொளி யுடியூப்பில் வெளியாகி தற்போது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.