Home Featured நாடு சுகாதாரத்தைப் பேணி ஒற்றுமையுடன் வாழ்ந்து பெருமை சேர்ப்போம் – டாக்டர் சுப்ரா உகாதி வாழ்த்து!

சுகாதாரத்தைப் பேணி ஒற்றுமையுடன் வாழ்ந்து பெருமை சேர்ப்போம் – டாக்டர் சுப்ரா உகாதி வாழ்த்து!

687
0
SHARE
Ad

subra-3-featureகோலாலம்பூர் – மலேசிய  சுகாதார  அமைச்சரும் ம.இ.கா தேசியத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர்  ச. சுப்பிரமணியம், மலேசியாவில் வாழும் தெலுங்கு வம்சாவளி மக்களுக்கு தனது உகாதி வாழ்த்தைத் தெரிவித்திருக்கிறார்.

டாக்டர் சுப்ராவின் உகாதி வாழ்த்துச் செய்தி பின்வருமாறு:-

“மலேசிய மண்ணில் வாழ்ந்தாலும் தெலுங்கு வம்சாவளி மக்கள், தங்களுடைய புத்தாண்டு நாளாகிய உகாதி திருநாளை ஒற்றுமையோடு கொண்டாடுகின்றனர் என்பது மிகவும் மகிழ்ச்சியான ஒன்றாகும்.”

#TamilSchoolmychoice

“மலேசிய  மக்கள், தங்கள் அருகில் வாழும் தெலுங்கு வம்சாவளி மக்களிடம் அன்புகாட்டி என்றும் நல்லிணக்க உணர்வுகளைப் பேணி வருகின்றனர். இந்த உறவும் உணர்வும் நாளுக்கு நாள் தழைத்திட வேண்டும். அவ்வகையில், இன்று உகாதி பண்டிகையைக் கொண்டாடவிருக்கும் அனைத்து மலேசியத் தெலுங்கு வம்சாவளிகளுக்கு எனது இனிய உகாதி தெலுங்கு புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாண்டு உகாதி பண்டிகையைத் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியுடனும் ஆரோக்கியத்துடனும் கொண்டாட எனது மனமார்ந்த வாழ்த்துகள்.”

“பன்மொழி பேசும் மக்கள் வாழும் மலேசியாவில் மொழி நல்லிணக்கத்திற்கு எடுத்துக் காட்டாக இந்தியர்கள் விளங்குகின்றனர் என்றால் அது மிகையாகாது. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, வேற்றுமையில் ஒற்றுமை ஆகிய தத்துவங்களின் அடிப்படையில், தெலுங்கு வம்சாவளியினர் பிற மொழிப் பேசும் மக்களோடு இணைந்து பல நூற்றாண்டுகளாக மலேசியாவில் வாழ்ந்து வருகின்றனர்.”

“இத்தகைய ஒற்றுமை, மலேசியாவில் தொடர்ந்து வரும் காலங்களிலும் தழைத்தோங்க வேண்டும் என்பதோடு இந்தத் தெலுங்கு புத்தாண்டானது நாம் அனைவரும் ஒரே குரலாக ஒலித்து ஒரே இலக்கை அடையும் ஆண்டாக அமைவது மட்டுமின்றி, மக்களின் வாழ்வில் புது வசந்தத்தைக் கொண்டுவரும் ஆண்டாகவும், வளத்தையும், நலத்தையும் வெற்றியையும் தரும் ஆண்டாகவும் விளங்க வேண்டும் என்றும் இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.” – இவ்வாறு டாக்டர் சுப்ரா தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டிருக்கிறார்.