சென்னை – ரஜினிகாந்த் நடிக்கும், எந்திரன் 2.0 திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா, தனது ஞானம் அறக்கட்டளை மூலம், இலங்கையில் போரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 150 வீடுகள் இலவசமாகக் கட்டித் தருகிறது.
வரும் ஏப்ரல் 9-ம் தேதி, நடைபெறும் இந்த வீடுகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக இருந்த ரஜினி, பின்னர் தமிழ் நாட்டில் எழுந்த நெருக்குதல்கள் காரணமாக, தனது வருகையை ரத்து செய்வதாக அறிவித்தார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மதிமுக தலைவர் வைகோ, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ஆகியோர் ரஜினிகாந்த் இலங்கை செல்லக்கூடாது என்று கேட்டுக் கொண்டதால் தான் ரஜினி தனது பயணத்தை இரத்து செய்ததாகக் கூறப்பட்டது.
இதனையடுத்து, ரஜினி வரவை ஆவலோடு எதிர்பார்த்திருந்த இலங்கையில் இருக்கும் ரஜினி ரசிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், இலங்கை ரசிகர்களுக்கு ரஜினி கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்.
அதில், “நீங்கள் என்மேல் வைத்திருக்கும் அன்பை ஊடகங்கள் மூலம் தெரிந்து கொண்டேன். நேரம் கூடிவரும் போது நாம் நேரில் சந்திப்போம்” என்று ரஜினி தெரிவித்திருக்கிறார்.